

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆர்சிடிசி) வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘அமேசிங் ஹைதராபாத்’ விமானச் சுற்றுலா வரும் பிப்ரவரி 21-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி நிறைவடைகிறது. இதில், பங்கேற்கும் பயணிகள் ஹைதராபாத்தில் உள்ள கோல்கொண்டா கோட்டை, லும்பினி கார்டன், பிர்லா மந்திர், ராமோஜி திரைப்பட நகரம், சலார்ஜங் அருங்காட்சியகம், சார்மினார் ஆகியவற்றை பார்த்து ரசிக்கலாம். 3 நாட்கள் சுற்றுலாவுக்கு ஒரு நபருக்கு ரூ.13,670 கட்டணமாகும். இதில் கோவை- ஹைதராபாத் எகானமிக் வகுப்பு விமான கட்டணம், 3 நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஹோட்டலில் தங்கும் அறை, காலை, இரவு உணவு, உள்ளூரை சுற்றிப்பார்க்க ஏசி வாகனம், சுற்றுலா மேலாளர் வசதி ஆகியவை அடங்கும்.
காசி யாத்திரைக்கு சிறப்பு ரயில்
ஆஸ்தா தீர்த்த யாத்திரை என்ற பெயரிலான காசி யாத்திரை ரயிலானது பூரி, கொனாரக், கொல்கத்தா, கயா, காசி, பிரயாகை (அலகாபாத்) போன்ற இடங்களுக்கு செல்ல உள்ளது. இந்த ரயில் மதுரையில் இருந்து வரும் பிப்ரவரி 5-ம் தேதி புறப்பட்டு திருவனந்தபுரம், பாலக்காடு, போத்தனூர், ஈரோடு, சேலம் வழியாக மேற்காணும் இடங்களுக்கு செல்லும். 10 நாட்கள் கொண்ட இந்த புனிதயாத்திரைக்கு ஒரு நபருக்கு கட்டணமாக ரூ.9,450 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மற்றுமொரு காசி யாத்திரை சிறப்பு ரயில் மூலம் காசி, கயா, பிரயாகை (அலகாபாத்), ஹரித்வார், டெல்லி, மதுரா போன்ற இடங்களில் உள்ள புகழ்பெற்ற கோயில்களைத் தரிசிக்கச் செல்லலாம். இந்த ரயில் மதுரையில் இருந்து வரும் 22-ம் தேதி புறப்பட்டு திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், பெங்களூரு, காட்பாடி, சென்னை பெரம்பூர் வழியாக மேற்காணும் இடங்களுக்கு செல்லும். 12 நாட்கள் கொண்ட இந்த யாத்திரைக்கு ஒரு நபருக்கு ரூ.11,340 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பாரத தரிசன சுற்றுலா ரயில் கட்டணத்தில் 2-ம் வகுப்பு ரயில், சைவ உணவு, தங்கும் இடம், போக்குவரத்து வசதி ஆகியவை அடங்கும்.
மத்திய, மாநில, பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் எல்.டி.சி. வசதியைப் பெறலாம். பயணிகள் தாங்கள் விரும்பும் பேக்கேஜில் முன்பதிவு செய்யவும், கூடுதல் விவரங்களை அறிந்துகொள்ளவும் ஐஆர்சிடிசி-ன் கோவை அலுவலகத்தை 9003140655, 8287931965 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.