

விரைவில் நல்ல உடல்நலத்துடன் வந்து மக்களுக்கு சேவை ஆற்றுவேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக சார்பில் அம்பத்தூரை அடுத்த கொரட்டூர் பேருந்து நிலையம் அருகில் பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணைச் செயலாளர்கள் சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினர். அதைத் தொடர்ந்து தொண்டர்களிடையே விஜயகாந்த் பேசும்போது, ‘‘மக்கள் அனைவருக்கும் வணக்கம். எனக்கு மொத்தம் 5 கடவுள்கள் உண்டு. எனக்காக பிரார்த்தனை செய்த தொண்டர்கள்தான் எனது முதல் கடவுள். விரைவில் பூரண உடல்நலம் பெற்று மீண்டு வருவேன். மக்களுக்கு சேவை ஆற்றுவேன். தேமுதிக தொண்டர்கள்
மற்றும் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.
இதைத் தொடர்ந்து, தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேசுகையில், ‘‘நமது நாட்டில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் சகோதரத்துவத்துடன் வாழ்கின்றனர். அவர்களிடையே பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் வகையில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோருக்குதான் இங்கு இடமில்லை. தற்போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் நாம் நல்ல வெற்றியை அடைந்துள்ளோம். அடுத்து வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக அதிக இடங்களைக் கைப்பற்ற தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். வரும் 2021-ம் ஆண்டில் தமிழகத்தில் தேமுதிக மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும்’’ என்றார்.