

ராமநாதபுரம் அருகே தேவிபட்டினத்தில் கடலில் வெடிவைத்து மீன்பிடித்ததாக 7 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் படகு பறிமுதல் செய்யப்பட்டன.
தேவிபட்டினம் கடலோரப் பகுதியில் சிலர் கடலில் வெடி வைத்து மீன் பிடிப்பதாக கடலோர காவல் குழுமப் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து தேவிபட்டினம் கடல் பகுதிக்கு கடலோர போலீஸார் ஞாயிற்றுக்கிழமை மாலை ரோந்து சென்றனர். அப்போது சிலர் வெடிவைத்து மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் போலீஸாரைப் பார்த்ததும் படகில் தப்பிச் சென்றனர்.
கடலோர குழுமப் போலீஸார் விரட்டி சென்று வெடி வைத்து மீன்பிடித்த 7 பேரை கைது செய்து கரைக்கு கொண்டு வந்தனர். விசாரணையில் ஏழு பேரும் திருப்பாலைக்குடியைச் சேர்ந்த ராஜாமுகம்மது (35), நாகூர்கனி (32), ராஜா (30) முகம்மதுகனி (29), சேக் தாவூது (28) மற்றும் தேவிபட்டினத்தைச் சார்ந்த அப்துல் மஜித் (23) முகம்மதுகனி (21) எனத் தெரியவந்தது.
அவர்களிடமிருந்து 6 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் நாட்டுப் படகையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெறுகிறது.