Published : 13 Jan 2020 09:13 AM
Last Updated : 13 Jan 2020 09:13 AM

உள்ளாட்சித் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் கூட்டணி கட்சிகளுக்கு குறைவான பதவிகளை ஒதுக்கிய திமுக- டெல்டா மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட்க்கு கணிசமான இடங்கள்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத தால் தலைவர், துணைத் தலைவர் பதவிகளை மிகக் குறைந்த அளவே கூட்டணி கட்சிகளுக்கு திமுக ஒதுக்கியுள்ளது.

27 மாவட்டங்களில் 515 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில், திமுக 243, காங்கிரஸ் 15, இந்திய கம்யூனிஸ்ட் 7, மார்க்சிஸ்ட் 2, மதிமுக 2, விசிக 1 என 270 இடங்களையும், 5 ஆயிரத்து 90 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில், திமுக 2,099, காங்கிரஸ் 132, இந்திய கம்யூனிஸ்ட் 62, மார்க் சிஸ்ட் 33, மதிமுக 18, விசிக 16, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1, இந்திய ஜனநாயகக் கட்சி 1 என மொத்தம் 2 ஆயிரத்து 362 இடங்களையும் திமுக தலை மையிலான மதச்சார்பற்ற முற் போக்குக் கூட்டணி கைப்பற்றியது.

மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. 27 மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளில் திமுக 12 இடங்களில் வென்றது. இந்த 12 மாவட்டங்களில் உள்ள துணைத் தலைவர் பதவிகளையும் திமுகவே கைப்பற்றியது. கூட்டணி கட்சிகளுக்கு ஒரு இடம்கூட வழங்கப்படவில்லை.

ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவி களில் 125 இடங்களில் திமுக வென்றது. கூட்டணி கட்சிகளான காங்கிரஸுக்கு 5, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சிக்கு 3 இடங்களை மட்டுமே ஒதுக்கியது. ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பதவிகளில் திமுக 107, காங்கிரஸ் 8, இந்திய கம்யூனிஸ்ட் 3 இடங்களில் வென்றன. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு சொற்ப இடங்களை வழங்கிய திமுக, மற்ற கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட், மதிமுக, விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி போன்ற கட்சிகளுக்கு தலைவர், துணைத் தலைவர் பதவிகளில் ஒன்றைக் கூட வழங்கவில்லை. இது அக் கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தலில் திமுகவின் செயல்பாடுகள் கூட் டணி தர்மத்துக்கு புறம்பானது என்று தமிழக காங்கிரஸ் தலை வர் கே.எஸ்.அழகிரி வெளிப்படை யாகவே அறிக்கை விட்டார். முன் னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம் பரமும் திமுக மீதான அதிருப்தியை தெரிவித்தார். அதைத் தொடர்ந்து காங்கிரஸுக்கு ஒருசில இடங்களை கூடுதலாக திமுக வழங்கியது.

இதுதொடர்பாக திமுக எம்.பி. ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:

மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் பதவிகளில் கூட்டணி கட்சிகளின் பலத்துக்கு ஏற்ப இடங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதிமுக கூட்டணியில் பாமகவின் வாக்கு வங்கியால் தருமபுரி, அரியலூர், கடலூரிலும் பாஜக உதவியுடன் கன்னியாகுமரி, தூத்துக்குடியிலும் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியைப் பிடித்தது.

அதனால் சேலம் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியை பாமகவுக்கும், துணைத் தலைவர் பதவிகளில் பாமக, பாஜகவுக்கு தலா 3, தேமுதிகவுக்கு 1 இடங் களையும் அதிமுக வழங்கியுள்ளது. ஆனால், காங்கிரஸுக்கு வாக்கு வங்கி உள்ள கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, தேனி ஆகிய தென்மாவட்டங்களில் திமுக கூட்டணிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அதுபோல கொங்கு மண்டலத்திலும் வெற்றி இல்லை.

எனவேதான் கூட்டணி கட்சி களுக்கு அவர்கள் கேட்ட இடங் களை வழங்க முடியவில்லை. அதே நேரத்தில் டெல்டா மாவட்டங் களில் திமுகவின் வெற்றிக்கு உதவிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கணிசமான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

ஊரக உள்ளாட்சித் தேர் தலிலேயே இப்படி கறார் காட்டும் திமுக, விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், அடுத்த ஆண்டு வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களில் எப்படி நடந்து கொள்ளுமோ என்ற கவலை திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், அடுத்த ஆண்டு வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களில் திமுக எப்படி நடந்து கொள்ளுமோ என்ற கவலை திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x