

தேசிய சித்த மருத்துவ தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சித்த மருத்துவத்தை உலக அளவில் பிரபலப்படுத்த, உலக சுகாதார நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதுகுறித்து தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ஆர்.மீனாகுமாரி கூறியதாவது:
சித்த மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும் அகத்தியரின் பிறந்த தினமான இன்று சித்த மருத்துவ தினமாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி கடந்த 50 நாட்களாக நாடுமுழுவதும் மத்திய, மாநில அரசுகளின் சித்த மருத்துவ நிறுவனங்கள், மருத்துவமனைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுடன் இணைத்து மூலிகை கண்காட்சிகள், மருத்
துவ முகாம்கள், விழிப்புணர்வு பேரணிகள், கருத்தரங்கங்கள், சொற்பொழிவுகள், விளையாட்டு போட்டிகள், பயிற்சி பட்டறைகள் நடைபெற்றன.
முதன்மையாக கருதப்படுபவர்களில் 18 சித்தர்கள். அவர்களில் முதல் சித்தர் அகத்தியர். 8 வகை யோகங்கள், 8 வகை சித்திகளில் வல்லவரான அகத்தியர், தமிழ் மருத்துவத்தை முதல்நிலைப்படுத்தி பல சிகிச்சை முறைகளை ஏற்படுத்தி சித்த மருத்துவத்தை தோற்றுவித்தார். உடல் கூறுகள், உடல் செயலியல், அறுவை சிகிச்சை, மன நோய்கள், மந்திரம், தந்திரம், வைத்தியம், யோகம், நோய் கணிப்பு, தத்துவம் என அனைத்திலும் அகத்தியர் நிபுணத்துவம் பெற்றவர்.
அகத்தியரைப் பற்றிய குறிப்புகளும் கல்வெட்டுகளும் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களிலும் காணப்படுகின்றன. கம்போடியா, தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா, இந்தோனே
ஷியா, வியட்நாம் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் காணப்படுகின்றன. அகத்தியர் திருவனந்தபுரத்தில் அனந்தசயனம் என்ற ஊரில் சமாதி அடைந்ததாக கூறப்பட்டாலும், கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோயிலிலும் இவரது சமாதி இருக்கிறது. தமிழ் மொழியின் தந்தை, தமிழ் இலக்கணத்தின் தந்தை எனவும் அகத்தியர் அழைக்கப்படுகிறார்.
இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளை (ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஓமியோபதி - AYUSH) உலகளவில் பிரபலப்படுத்த மத்திய ஆயுஷ் அமைச்சகம் பல்வேறு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக பாரம்பரிய மருத்துவம் தொடர்பாக மத்திய ஆயுஷ் அமைச்சகம், உலக சுகாதார நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதேபோல் 10 நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்படி நாடுமுழுவதும் 1,50,000 நலவாழ்வு மையங்களை ஏற்படுத்துவதாகும். இதில், சித்த மருத்துவம் உள்ளிட்ட 12,500 ஆயுஷ் நலவாழ்வு மையங்களை வரும் 5 ஆண்டுகளில் உருவாக்கவும், இந்த ஆண்டுக்குள் 4,000 நலவாழ்வு மையங்களை உருவாக்கவும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
சித்த மருத்துவ தினத்தைப் போலவே, தன்வந்திரி பிறந்த தினம் ஆயுர்வேத மருத்துவ தினமாகவும் ஹக்கீம் அஜ்மல் கான் பிறந்த தினம் யுனானி மருத்துவ தினமாகவும் சாமுயேல் ஹானிமன் பிறந்த தினம் ஓமியோபதி மருத்துவ தினமாகவும் மகாத்மா காந்தி புனேவில் உள்ள இயற்கை நலவாழ்வு மையத்தை தொடங்க கையெழுத்திட்ட நவம்பர் 18-ம் தேதி இயற்கை மருத்துவ தினமாகவும்
ஜூன் 21-ம் தேதி யோகா தினமாகவும் கொண்டாடப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.