Published : 13 Jan 2020 07:44 AM
Last Updated : 13 Jan 2020 07:44 AM

உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தர்மத்தை மீறியது யார்?: திமுக - காங்கிரஸ் இடையே தொடங்கிய ‘பஞ்சாயத்து’

மாவட்ட அளவில் திமுக-காங்கிரஸ் கட்சியினரிடையே ஒத்துழைப்பு இல்லாததால், உள்ளாட்சித் தேர்தலில் திமுக, கூடுதல் கவுன்சிலர்களை பெற்றிருந்தும் மறைமுக தலைவர் தேர்தலில் அதிமுகவைவிட மாவட்ட பஞ் சாயத்து தலைவர்களையும், ஒன்றிய தலைவர்களையும் கூடுத லாகப் பெற முடியவில்லை. அதனால், திமுக, காங்கிரஸ் கூட்டணியில், யார் கூட்டணி தர்மத்தை மீறியது என்ற புகைச்சல் ஏற்படத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுகவும், அதிமுகவும் ஒப்புக்கு மட்டுமே கூட்டணி அமைத்து போட்டியிட்டன. மற்ற
படி, திமுகவும், அதிமுகவும் பெரிய அளவில் கூட்டணி கட்சிகளுக்கு மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் ‘சீட்டு’களை ஒதுக்கவில்லை. அதனால், பலமாவட்டங்களில் திமுகவையும், அதிமுகவையும் எதிர்த்து அதன்கூட்டணி கட்சிகளே போட்டியிட்டன. இதில், காங்கிரஸ் மாநிலதலைவர் கே.எஸ்.அழகிரி வெளிப்படையாகவே, திமுக செயல்பாடு கூட்டணி தர்மத்துக்கு புறம்பானது என்று அறிக்கை வெளியிடும் அளவுக்கு இரு கட்சிகளுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது.

கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுகவை எதிர்த்து காங்கிரஸ் அனைத்து இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியதால் அந்த மாவட்டத்தில் ஒரு மாவட்டகவுன்சிலர் பதவியைக்கூட திமுக பெறவில்லை.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் ஒரே கூட்டணியில் போட்டியிட்டாலும் ஒத்துழைப்பு இல்லாததால் காங்கிரஸுக்கு ஒதுக்கிய இடங்களில் திமுகவும், திமுகவுக்கு ஒதுக்கிய இடங்களில் காங்கிரஸும் வேலை பார்க்கவில்லை. அதனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவி உட்பட அதிக அளவில் ஒன்றியத் தலைவர் பதவிகளையும் அதிமுக கைப்பற்றியது.

காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, மறைமுக தலைவர் தேர்தல் நடப்பதற்கு முந்தைய நாள், திமுகவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டதால் அவரது ஆதங்கப் பேச்சு காங்கிரஸ் கவுன்சிலர்களிடையே ஆழமாக பதிந்துவிட்டது. பல மாவட்டங்களில் மறைமுக தலைவர் தேர்தலில் திமுகவுக்குஎதிராக காங்கிரஸ் கவுன்சிலர்கள் வாக்களித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதனால், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவைவிட திமுக கூடுதல் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர்களை பெற் றிருந்தும் அதிமுகவைவிட அதிக மாவட்ட பஞ்சாயத்து தலைவர், ஒன்றிய தலைவர் பதவிகளை பிடிக்க முடிய வில்லை.

புதுக்கோட்டையில்..

புதுக்கோட்டை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் திமுக கூட்டணிக்கு பெரும்பான்மை கவுன்சிலர்கள் ஆதரவு இருந்தும் காங்கிரஸ் ஆதரவுடன் தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியது. மேலூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மை பெற்றிருந்தும், அதிமுக கூட்டணித் தலைவர் பதவியை கைப்பற்றியது. இதில், காங்கிரஸ் கவுன்சிலர் தங்களுக்கு வாக்களிக்கவில்லை என்று திமுகவினர் குற்றம்சாட்டுகின்றனர்.

சிவகங்கையில்..

சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் முதலே திமுக - காங்கிரஸ் கட்சியினரிடையே ஒத்துழைப்பு இல்லாததால் அதிமுக, இந்த மாவட்டத்தில் திமுகவைவிட கூடுதல் ஊராட்சி ஒன்றியங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சியை போலவே, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், திமுக மீது வருத்தம் இருப்பதாக கூறப்படுகிறது.

வரவிருக்கும் சட்டப் பேரவை தேர்தலுக்குள் கூட்டணி கட்சிகளுடனான வருத்தங்களையும், விரிசல்களையும் திமுக சரிசெய்யாவிட்டால், அது அதிமுகவுக்கு சாதகமாகிவிடும் என்று அக்கூட்டணி கட்சியினர் ‘பஞ்சாயத்து’ பேச ஆரம்பித் துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x