Published : 12 Jan 2020 02:31 PM
Last Updated : 12 Jan 2020 02:31 PM

நூற்றாண்டு சாதனைச் சரித்திரத்தில் திராவிட இயக்கக் கொள்கைகள் வேரூன்றி கம்பீரமான காலச் சுவடுகளாகப் பதிந்துள்ளது: ஸ்டாலின் பெருமிதம்

இந்த நூற்றாண்டு சாதனைச் சரித்திரத்தில் திராவிட இயக்கக் கொள்கைகள் வேரூன்றி - கம்பீரமான காலச் சுவடுகளாகப் பதிந்திருப்பதை எண்ணி அக மகிழ்கிறேன் என்று சட்டமன்றத்தின் நூற்றாண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “1921-ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் பன்னிரெண்டாம் நாள் கன்னாட் கோமகன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட முதல் மாகாண சுயாட்சிச் சட்டமன்றத்தின் நூற்றாண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை மாகாண மன்றத்திற்கு 30.11.1920 அன்று நிகழ்ந்த முதல் பொதுத்தேர்தலில், நீதிக்கட்சி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி திரு சுப்புராயலு ரெட்டி தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அமைச்சரவை செயல்பட்ட இந்த மாகாண சுயாட்சி சட்டமன்றத்தின் பவள விழாவையும், 1935-ஆம் ஆண்டு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கீழ் முதன் முதலாக 1937-ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் ஏற்படுத்தப்பட்ட சென்னை சட்டப்பேரவையின் வைர விழா நிகழ்ச்சியையும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது வெகு விமரிசையாகக் கொண்டாடியதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 14.7.1997 அன்று நடைபெற்ற அந்த மாபெரும் விழா “சட்டமன்ற வரலாற்றை” தமிழக இளைஞர்களுக்கு எல்லாம் நினைவூட்டிய அற்புதமான விழா என்பதை அனைவரும் அறிவர்.

பேரறிஞர் அண்ணா அவர்கள், சென்னை மாநிலத்திற்கு “தமிழ்நாடு”என்று பெயர் சூட்டி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தனித் தீர்மானம் நிறைவேற்றியது, சுயமரியாதை மற்றும் சீர்திருத்த திருமணத்தைச் செல்லுபடியாக்கும் சட்டம் வகுத்தது, தமிழை ஆட்சிமொழியாக்கி - மும்மொழித் திட்டத்தை நிராகரித்து தமிழகத்தில் இரு மொழித் திட்டத்தை நிறைவேற்றும் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றியது, நிலச்சீர்திருத்த (உயர் அளவைக் குறைத்தல்) சட்டத்தினை உருவாக்கியது, மே தினத்தை அரசு விடுமுறையாக்கிட வழி வகுத்தது, குடியிருப்பு மனைச் சட்டம் உருவாக்கியது, புகழ் பெற்ற மாநில சுயாட்சி தீர்மானத்தை தலைவர் கலைஞர் அவர்கள் நிறைவேற்றியது, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறைவேற்றி - அதைச் செயல்படுத்தியது, பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை வழங்கிடும் சட்டம், கிராமப் புறங்களின் முன்னேற்றத்திற்கு நமக்கு நாமே திட்டம், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், சமூக நல்லிணக்கத்திற்குப் பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம், நுழைவுத் தேர்வை ஒழித்திடும் சட்டம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்திற்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு, சிறுபான்மையினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு, அருந்ததியினருக்கு தனி இட ஒதுக்கீடு, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளிட்ட 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி சமூக நீதியை நிலைநாட்டிய பல்வேறு அரிய சட்டங்களும், ஆணைகளும் வெளிவருவதற்கு அஸ்திவாரமாகத் திகழ்ந்தது - மக்களிடையே சமூக, பொருளாதார சமத்துவத்தை நிலைநாட்டி- மாநிலத்தின் அனைத்து வகையான முன்னேற்றத்திற்கும் வித்திட்டது இந்த சட்டமன்றம் என்பதைப் பெருமையுடன் பதிவு செய்ய விரும்புகிறேன்.

சாமானியர்களுக்கும் சரித்திரச் சிறப்புமிக்க சாதனைகளை அள்ளிக் கொடுத்த இந்தச் சட்டமன்றத்தின் நூற்றாண்டுடன், திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு வரலாறும் பின்னிப் பிணைந்திருப்பதும், நாட்டு மக்களின் நலனை முக்கிய நோக்கமாகக் கொண்டு அரிய பணியாற்றி - வியத்தகு சாதனைகளை நிகழ்த்திய பல அரும்பெரும் தலைவர்களின் தியாக வரலாறு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவில் சங்கமித்திருப்பதும், ஒவ்வொரு தமிழரும் - இந்தியரும் எண்ணி எண்ணிப் பெருமைப்படத் தக்கவை!

சட்டமன்ற மேலவை 1986-ல் நீக்கப்பட்டாலும், அறிஞர் பெருமக்கள் இருந்து தொலைநோக்குப் பார்வையுடன் சிந்தித்து அறிவுரை வழங்கி வழிகாட்டும் அந்த மேலவை வேண்டும் என்பதை வலியுறுத்தி, திராவிட முன்னேற்றக் கழகம் இதே மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுவது, இந்தத் தருணத்தில் பொருத்தமானது என்று கருதுகிறேன்.

ஆகவே தற்போது தொடங்கி உள்ள தமிழக சட்டப்பேரவையின் இந்த நூற்றாண்டு விழா நிறைவடையும் போது - மக்களாட்சி மாண்புகளைக் காத்திடும் மேலுமொரு புதிய அத்தியாயம் விரைவில் உருவாவதற்கான களம் இப்போதே அமைந்து விட்டது என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.

அந்தப் புதிய நம்பிக்கையுடன் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு மட்டுமின்றி - ஜனநாயக ரீதியான விவாதங்களில் ஒட்டுமொத்த நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கே எடுத்துக்காட்டாக, இந்தப் பெருமை மிக்க தமிழ்நாடு சட்டமன்றத்தின் எதிர்காலப் பணிகள் அமைந்திடுமாறு வழிகள் உருவாக்கப்பட்டு செப்பனிடப்படும் என்ற உறுதியினை அளித்து - இந்த நூற்றாண்டு சாதனைச் சரித்திரத்தில் திராவிட இயக்கக் கொள்கைகள் வேரூன்றி - கம்பீரமான காலச் சுவடுகளாகப் பதிந்திருப்பதை எண்ணி அக மகிழ்கிறேன்.

அந்தத் திராவிட இயக்க ஆணி வேருக்கு மேலும் உரம் சேர்க்கவும் - நம் சுயமரியாதை காக்கவும், தமிழினம் மற்றும் தமிழ்மொழியின் பெருமைகளைப் போற்றிப் பாராட்டிப் பாதுகாக்கவும், இளைஞர்கள் இன்முகத்துடனும் நம்பிக்கையுடனும் ஜனநாயகப் போர்ப்பரணி பாட ஆயத்தமாகிட வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x