Last Updated : 12 Jan, 2020 02:15 PM

 

Published : 12 Jan 2020 02:15 PM
Last Updated : 12 Jan 2020 02:15 PM

ஜெயலலிதா வாக்குறுதியை தமிழக அரசு நிச்சயம் நிறைவேற்றும் என நம்புகிறேன்: பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கண்ணீர்

ஜெயலலிதா வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்றும் என நம்புகிறேன் என பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 29 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனின் தந்தை குயில்தாசனுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் அவரை அருகேயிருந்து கவனித்து கொள்ள ஒரு மாதம் பரோல் கேட்டு விண்ணப்பித்தார்.

அதன்படி, கடந்த நவம்பர் மாதம் 12-ம் தேதி பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கியது. இதையடுத்து, திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு பேரறிவாளன் சென்றார். இதையடுத்து, அவரது வீட்டுக்கு காவல் துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தினர். ஜோலார்பேட்டை காவல் துறையினர் தினந்தோறும் அவரது வீட்டுக்கே சென்று அவரிடம் கையெழுத்து வாங்கினர்.

இந்நிலையில், பேரறிவாளன் சகோதியின் மகள் திருமண நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அவரது தந்தை குயில்தாசனை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று மருத்துவ சிகிச்சை அளித்தார். இதையடுத்து, ஒரு மாதம் பரோல் முடியும் போது, மீண்டும் பரோல் கேட்டு அற்புதம்மாள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

அதன்பேரில், பேரறிவாளன் பரோல் மேலும் ஒரு மாதம் காலத்துக்கு நீடிக்கப்பட்டது. இந்நிலையில், குயில்தாசன் உடல்நிலை பெரும் பின்னடைவு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் குயில்தாசன் அனுமதிக்கப்பட்டார். அவருடன் பேரறிவாளன் மருத்துவமனையில் தங்கி தந்தைக்கு தேவையான உதவிகளை செய்தார். இதற்கிடையே, பேரறிவாளன் பரோல் காலத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்க வேண்டும் என அற்புதம்மாள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

இந்த கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்தால், பேரறிவாளன் நேற்று காலை 11.30 மணிக்கு சென்னை புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். வேலூர் ஆயதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் விநாயகம் தலைமையில், 10-க்கும் மேற்பட்ட காவலர்கள் பேரறிவாளனை பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 11.30 மணியளவில் தனி வேன் மூலம் சென்னை புழல் சிறைக்கு அழைத்து சென்றனர்.

இது குறித்து பேரிறவாளன் தாயார் அற்புதம்மாள் கூறியதாவது:

2 மாதம் பரோல் முடிந்து இன்று பேரறிவாளன் சிறைக்கு திரும்புகிறார். 2 நாட்களில் பொங்கல் திருவிழா தமிழக மக்கள் குடும்பத்தாருடன் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட தயாராகி வருகின்றனர். என் குடும்பத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி கடந்த 29 ஆண்டுகளாக இல்லை. விசாரணைக்காக அழைத்துச் செல்கிறோம் எனக்கூறி பேரறிவாளன் கொண்டு சென்று, 29 ஆண்டுகள் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.

பேரறிவாளனின் தந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளதால், பரோல் காலத்தை மேலும் ஒரு மாதம் நீடிக்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தோம். பரோல் கிடைக்கும் என நம்பியுடன் இருந்தோம். ஆனால், கிடைக்கவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 7 பேரும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள், பேரறிவாளன் உங்களுடன் இருப்பார் என என் கையை பிடித்து உறுதியளித்தார்.

அவரது வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்றும் என நம்புகிறேன். எனக்கு 72 வயது ஆகிறது. என் கணவருக்கு 78 வயது ஆகிறது. கடைசி காலத்தில் என் மகன் எங்களுடன் இருக்க நாங்கள் ஆசைப்படுகிறோம். அதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்ய வேண்டும். வயதாகிவிட்டதால் என்னால் தொடர்ந்து போராட முடியவில்லை.

என் நிலை எந்த தாய்க்கும் வரக்கூடாது. பேரறிவாளனுக்கு சிறுநீரக தொற்று நோய் இருப்பதால் அவருக்கு சிறையில் மருத்துவ சிகிச்சை அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x