

புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் பவ் (எ) வெங்கடேசன்(31). இவர், சுமார் 8 ஆண்டுகளாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் தனி உதவியாளராக இருந்து வந்தார்.
மேலும், அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவராகவும் இருந்தார்.
இந்நிலையில், புதுக்கோட்டையில் நேற்று மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர், ஒன்றிய ஊராட்சி குழுத் தலைவர் உள்ளிட்ட பதவிகளில் வெற்றி பெற்ற அதிமுகவினரு அமைச்சர் விஜயபாஸ்கர் வாழ்த்துக்கூறிய பிறகு அங்கிருந்து சென்னைக்கு செல்வதற்காக திருச்சி விமான நிலையத்துக்கு காரில் அமைச்சர் விஜயபாஸ்கர், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை சென்றார்.
அமைச்சரை விமான நிலையத்தில் விட்டுவிட்டு அங்கிருந்து அமைச்சர் பயணிக்கும் கார் அல்லாமல் வேறு ஒரு அரசு காரில் வெங்கடேசன் ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். காரை ஓட்டுநர் இடையப்பட்டியைச் சேர்ந்த செல்வம்(38) ஓட்டியுள்ளார்.கிளிக்குடி அருகே வீரபெருமாள்பட்டி பகுதியில் நள்ளிரவில் சென்றோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி எதிர்பாராத விதமாக புளியமரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது.
அதில், காரின் முன்பக்கம் நொறுங்கியது. இந்த விபத்தில் சிக்கி வெங்கடேசன், செல்வம் ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இருவரது உடல்களையும் அக்கம்பக்கத்தினர், அன்னவாசல் போலீஸார் மீட்டனர். அதில், வெங்கடேசன் உடலை இலுப்பூர் அரசு மருத்துவமனையிலும், செல்வத்தின் உடலை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் வைக்கப்பட்டுள்ளன.
இந்த விபத்து குறித்து அன்னவாசல் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாலை விபத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பரம்பூர் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு அமைச்சரின் தனி உதவியாளர் வெங்கடேசனின் தாயார் இந்திரா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.