கொள்ளிடத்தில் வெற்றி பெற்ற திமுக பிரமுகரின் வாக்குச்சீட்டை விழுங்கிய பாமக கவுன்சிலர்

கொள்ளிடத்தில் வெற்றி பெற்ற திமுக பிரமுகரின் வாக்குச்சீட்டை விழுங்கிய பாமக கவுன்சிலர்
Updated on
1 min read

நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவருக்கான மறைமுக தேர்தல் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் திமுகவைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் 13 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுகவைச் சேர்ந்த நற்குணன் 10 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

வெற்றியை அறிவித்த தேர்தல் அலுவலர் கலைச்செல்வியின் மேஜையில், ஒன்றியக் குழுத் தலைவராக வெற்றி பெற்ற ஜெயப்பிரகாஷ் பெற்ற வாக்கு சீட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. அந்த வாக்குச் சீட்டுகளில் 3-ஐ பாமக மாவட்டச் செயலாளரும், 14-வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினருமான அன்பழகன் திடீரென எடுத்து வாயில் போட்டு மென்று தின்று விழுங்கிவிட்டு, தண்ணீரைக் குடித்துவிட்டு அனைவருக்கும் மத்தியில் ஏப்பம் விட்டார்.

வெற்றி அறிவிக்கப்பட்ட நிலையில், அவரது விநோதமான நடவடிக்கையைப் பார்த்த ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்கள், ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அவைக் கூடத்துக்குள் நுழைந்த போலீஸார் பிரச்சினை எதுவும் நடைபெறாமல் சமாதானம் செய்து வைத்தனர். தேர்தல் அலுவலர் கலைச்செல்வி திமுகவை சேர்ந்த ஜெயபிரகாஷுக்கு வெற்றிச் சான்றிதழை வழங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in