

குடியுரிமை சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படும் என்று நம்புவதாக மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு விமானம் மூலம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று சென்னை விமானம் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, நடிகர்களின் சம்பளம் அதிகமாக இருப்பதால் தயாரிப்பாளர்கள் மன வேதனையுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகிறதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “அது ரொம்ப நாளாக கூறி வருகின்றனர். திறமை தான் அதை கூட்டுகிறது. பாராட்டு தான் அதை அதிகரிக்கிறது” என்றார்.
மேலும், ‘இந்தியா முழுவதும் போராட்டம் நடந்து வரும் சூழலில் குடியுரிமை சட்டம் அமலுக்கு வந்துள்ளதே’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “அந்த வீம்பு அவர்களுக்கு எப்போதும் உண்டு. ஜிஎஸ்டி கூட அப்படி தான் கொண்டுவந்தார்கள். அதன் பிறகு, பின் வாங்கி மாற்றங்களை செய்ய வேண்டிய நிலை வந்தது. சட்டங்கள் மக்களுக்கானது. தேவைப்பட்டால் திருத்தங்களை கொண்டு வர வேண்டியது. அது காலம் காலமாக நடந்து வருகிறது. அது மீண்டும் நிகழும் என்று நம்புகிறேன்” என்றார்.