Published : 12 Jan 2020 07:30 AM
Last Updated : 12 Jan 2020 07:30 AM

வேட்புமனுக்கள் கிழிப்பு, வாகனம் உடைப்பால் ஊத்தங்கரை ஒன்றியக்குழு தலைவர் துணை தலைவர் தேர்தல் தள்ளிவைப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியத்துக்கு உட்பட்ட 22 வார்டு உறுப்பினர்களுக்கு தேர்தல் நடந்தது. இதில், திமுக 8 இடங்களிலும், அதிமுக 6 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும், பாமக 3 இடத்திலும், சுயேச்சைகள் 4 இடத்திலும் வெற்றி பெற்று இருந்தனர். நேற்று காலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்காக திமுக வார்டு உறுப்பினர்கள் உட்பட 13 பேர் ஒரு அணியாக காலை 9 மணிக்கு, ஊத்தங்கரை பிடிஓ., அலுவலகத்துக்கு வந்தனர். இதேபோல், அதிமுகவைச் சேர்ந்த6 வார்டு உறுப்பினர்கள் உட்பட9 பேர் ஒரு அணியாக காலை 10.45 மணிக்கு வேனில் வந்தனர். அப்போது மர்ம நபர்கள் சிலர் வேன்மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.வேனை ஓட்டிச் சென்ற கீழ்குப்பத்தைச் சேர்ந்த ஓட்டுநர் கார்த்திகேயன், வார்டு உறுப்பினர் சுகந்தி ஆகியோர் காயம் அடைந்தனர்.

ஆவணங்கள் கிழிப்பு

மறைமுக தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மற்றும் ஆவணங்கள் கொண்டு வரப்பட்டன. அதிமுகவைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் சிலர் ஆவணங்களை கிழித்து வீசினர். இதன் காரணமாக தேர்தலை சிறிது நேரத்துக்கு நிறுத்திவைப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலரான, வட்டார வளர்ச்சி அலுவலர் அன்னபூரணி தெரிவித்தார்.

ஆனால், உடனடியாக தலைவர், துணை தலைவருக்கான தேர்தல் நடத்த வேண்டும் எனக்கூறி திமுகவினர் முற்றுகை, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், வார்டு உறுப்பினர்கள் அல்லாத சிலரை போலீஸார் உள்ளே அனுமதித்திருந்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பிடிஓ அலுவலகம் முன்பு குவிக்கப்பட்டனர். இதனால் மாலை வரை பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.

நேற்று மாலை தேர்தல் நடத்தும் அலுவலரும், வட்டார வளர்ச்சி அலுவலருமான அன்னபூரணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘ஊத்தங்கரை ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கான தேர்தலுக்கான வேட்புமனுக்கள் வழங்கப்பட்டன. இதற்கிடையில் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் வேட்புமனு மற்றும் இதர ஆவணங்களை கிழித்து ரகளையில் ஈடுபட்டதால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டது. எனவே, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x