

அரசு நூலகங்களுக்கு புத்தகங்கள் முறையாக வாங்கப்படாத தால் எழுத்தாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ‘அச்சமில்லை அச்சமில்லை’ நூல் வெளீயீட்டு விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆங்கிலத்தில் எழுதி, தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள ‘அச்சமில்லை அச்சமில்லை’ மற்றும் கீரனூர் ஜாகிர்ராஜா எழுதிய ‘சாமானியரைப் பற்றிய குறிப்புகள்’ ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா எழுத்து மற்றும் கவிதா பதிப்பகம் சார்பில், சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யாபவனில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த நூல்களை கவிஞர் சிற்பி வெளியிட, கவிஞர் வைர முத்து பெற்றுக்கொண்டார். இதையடுத்து, கீரனூர் ஜாகிர்ராஜாவுக்கு செளந்தரா கைலாசம் இலக்கியப் பரிசாக ரூ.1 லட்சத்துக்கான காசோலையை அவ்வை நடராசன் வழங்கினார்.
நூல் விற்பனை சரிவு
இந்த விழாவில் ப.சிதம்பரம் பேசியதாவது:
தொழில்நுட்பம் வளர்ந்துவரும் இன்றைய காலகட்டத்தில் புத்தகங்கள் அச்சிடுவது குறைந்துவிட்டதால் நூல் விற்பனையும் சரிந்து வருகிறது. நூலகங்களுக்கும் புத்தகங்களை அரசு முறையாக வாங்குவதில்லை. நாம் செலுத்தும் நூலக வரியை சரியாகப் பயன்படுத்தி, அரசு கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு புத்தகங்கள் வாங்கிஇருந்தால்கூட இன்று 100 எழுத்தாளர்கள் பிழைத்திருப் பார்கள். இந்த விவகாரத்தில் தமிழக அரசு இனியும் கவனம் செலுத்தாவிட்டால் எழுத்தாளர்கள் நிலை மிகவும் கவலைக்குரியதாகி விடும்.
2018-ம் ஆண்டு நான் எழுதிய ஆங்கில நூல் ‘அச்சமில்லை அச்சமில்லை’ என்ற பெயரில் தற்போது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தலைப்பு 2020-ம் ஆண்டில்கூட நமக்கு பொருத்தமாக இருக்கிறது. நாட்டின் பொருளாதாரம் தற்போது மோசமாக உள்ளநிலையிலும் இதுபற்றி ஊடகங்க ளில் விவாதிக்கப்படுவதில்லை. அதேநேரம் போலி செய்திகளையும், கவர்ச்சியான அறிவிப்புகளையும் மக்கள் எளிதாக நம்பி விடுகின்றனர். இனியாவது செய்தியின் உண்மைத் தன்மையை அறிய முற்பட வேண்டும்.
இவ்வாறு சிதம்பரம் பேசினார்.
கவிஞர் வைரமுத்து பேசும்போது, ‘‘அச்சமில்லை, அச்சமில்லை என்ற இந்த நூலின் தலைப்பை தற்போதைய காலகட்டத்தில் வேறு யாரும் தேர்வு செய்திருக்க முடியாது. அன்று பாரதியார் கூறியதுபோல, இன்றுஅ ச்சமில்லை, அச்சமில்லை என சிதம்பரம் கூறுகிறார். ஒருவர் பணம், தங்கம் போன்ற சொத்துகளை சேர்ப்பதைவிட கண்டிப்பாக கோபத்தை சேர்த்துவைக்க வேண்டும். அதை சரியான நேரம் வரும்போது அதற்குரிய இடத்தில் காண்பிக்க வேண்டும். அந்த வகையில் சிதம்பரம் தன் கோபத்தை நிச்சயம் காண்பிப்பார்” என்றார்.
இந்த நூல் வெளியீட்டு விழாவில் கவிதா பதிப்பகம் உரிமையாளர் சேது சொக்கலிங்கம், கவிஞர் சல்மா, எழுத்தாளர் நாஞ்சில் நாடன், ‘அச்சமில்லை அச்சமில்லை’ நூலின் மொழிபெயர்ப்பாளர் ரமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.