Published : 11 Jan 2020 09:53 PM
Last Updated : 11 Jan 2020 09:53 PM

மோசடி என்றால் என்னவென்றே அதிமுகவுக்குத் தெரியாது; உள்ளாட்சித் தேர்தலில் முதலிடம்: அமைச்சர் காமராஜ் பேட்டி 

திமுக ஆட்சியில்தான் மோசடி நடக்குமே தவிர, அதிமுக ஆட்சியில் நடக்காது. மோசடி என்றால் என்னவென்றே எங்களுக்குத் தெரியாது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் ஆகிய 10 ஆயிரத்து 300 உள்ளாட்சிப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் இன்று (ஜன.11) நடைபெற்றது.

இந்நிலையில் இன்று உணவு வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களிடம் பேசும்போது, ''ஜெயலலிதாவின் திட்டங்களைத் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். இன்னும் ஜெயலலிதா நினைத்ததைச் செயல்படுத்தி வருவதால் தமிழக மக்கள் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு பெரிய அளவில் ஆதரவைத் தந்துள்ளனர்.

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தமிழகம் முழுவதும் அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. மாவட்ட ஊராட்சித் தலைவர்களாக இருந்தாலும் சரி, ஒன்றியக் குழு தலைவர்களாக இருந்தாலும் சரி அதிமுகதான் தமிழக அளவில் முதலிடம் பெற்றுள்ளது. அதிமுகவின் வெற்றி தொடர்ந்து நீடிக்கும். நிலைக்கும்.

9 மாவட்டங்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக 100 சதவீத வெற்றியைப் பெறும்'' என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் காமராஜ் பதில் அளித்தார்.

மறைமுகத் தேர்தலில் அதிமுகவும் தேர்தல் ஆணையமும் இணைந்து குழப்பம் செய்துள்ளதாக திமுக குற்றம் சாட்டியுள்ளதே?

அவர்களுக்கு அதுதான் வேலை. ஆரம்பத்தில் இருந்து தேர்தலைச் சந்திக்க திமுக தயாராக இல்லை. தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்தார்கள். நீதிமன்றம் சென்றார்கள். தேர்தலை நிறுத்தப் பார்த்தார்கள். முடியவில்லை. வாக்கு எண்ணிக்கையை நிறுத்தப் பார்த்தார்கள். அதுவும் முடியவில்லை. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வந்ததும் அதில் மோசடி என்று திமுக சொன்னது. இப்போது மறைமுகத் தேர்தலில் மோசடி என்று திமுகவினர் கூறுகிறார்கள். அவர்கள் ஆட்சியிலும் மறைமுகத் தேர்தல் நடந்தது. எனவே, இதில் மோசடி எல்லாம் எதுவும் இல்லை.

திமுக ஆட்சியில்தான் மோசடி நடக்குமே தவிர, அதிமுக ஆட்சியில் நடக்காது. மோசடி என்றால் என்னவென்றே எங்களுக்குத் தெரியாது. மோசடி செய்பவர்கள் திமுகவினர்தான். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் நேர்மையாக ஆட்சி நடத்துகிறோம். அதைப்போலத்தான் தேர்தல் ஆணையம் இந்தத் தேர்தலை முறையாக, நீதியாக நடத்தி முடித்துள்ளது.

தேர்தல் முடிவின்போது திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றதாகச் சொல்லப்பட்டது. மறைமுகத் தேர்தலின்போது அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றதாகச் சொல்லப்படுகிறதே? எப்படி?

அதிமுகவின் வெற்றி அப்படித்தான். ஆரம்பத்தில் வெற்றி இல்லாத மாதிரி தெரியும். ஆனால், வெற்றி பெற்றுவிடும். அதிமுகவின் வரலாறே இப்படித்தான். தொடர்ந்து வெற்றி பெறுகிற இயக்கம் இது. அதிமுகவை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது என்பதற்கு இந்தத் தேர்தல் வெற்றியே உதாரணம்.

அதிமுகவுக்கு தோல்வி வந்துவிடும், விழுந்துவிடுவார்கள் என்று சொல்லலாம். ஆனால், மீண்டும் எழுந்து நிற்கும் என்பதற்கான உதாரணமே இந்தத் தேர்தல் வெற்றி.

நகராட்சித் தேர்தல், மாநகராட்சித் தேர்தல் ஓராண்டுக்குள் நடைபெறுமா?

நிச்சயம் நடைபெறும். தேர்தல் ஆணையம்தான் தேர்தல் நடைபெறும் என்று கூறியுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் வெற்றி சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலிக்குமா?

கண்டிப்பாக எடுபடும், எதிரொலிக்கும். எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் இயக்கம் அதிமுக. உள்ளாட்சித் தேர்தல் வெற்றி என்பது அதிமுகவுக்குக் கிடைத்த வரலாற்று வெற்றி.

இவ்வாறு அமைச்சர் காமராஜ் பதில் அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x