Published : 11 Jan 2020 09:27 PM
Last Updated : 11 Jan 2020 09:27 PM

2021-ல் ரஜினி தர்பார் அரசியலில் வெல்லுமா? ரஜினி, காங்கிரஸ், பாமக, டிடிவி கூட்டணி அமையும்: அரசியல் விமர்சகர் அதிரடிப் பேட்டி

2021-ல் ரஜினியின் தர்பார் அரசியல் நடக்கும். அனைவரையும் அடித்துத் தூக்கிப்போட்டுப் பெரிய கூட்டணி அமைப்பார் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கூறியுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலில் இரண்டு கட்சிகளும் கணிசமான இடம் பெற்றுள்ளன. சம அளவு அந்தஸ்து பெற்றுள்ளன. திமுக, அதிமுக இரு தரப்பும் சம பலத்துடன் உள்ளன. இதை வெற்றிடம் நிரப்பப்பட்டதாக இருதரப்பும் சொல்கின்றன. ஆனால் அவ்வாறில்லை. ரஜினி என்கிற புயல் வரும்போது அந்த நிலையே தலைகீழாக மாறிவிடும் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கூறியுள்ளார்.

'இந்து தமிழ் திசை' இணையதளம் சார்பில் ரவீந்திரன் துரைசாமியிடம் ரஜினி அரசியல் குறித்துக் கேட்டபோது அவர் கூறியது:

உள்ளாட்சித் தேர்தல் வெற்றி மூலம் எடப்பாடி பழனிசாமியும் ஸ்டாலினும் வெற்றிடத்தை நிரப்பிவிட்டார்களா?

வெற்றிடம் நிரப்பிவிட்டார்கள் என்பதெல்லாம் இல்லை. இது கட்சியின் பலத்தில் வந்தது. தலைமை அளவிலான வெற்றி அல்ல. தலைவர் பலத்தில் ரஜினி வரும்போது தெரியும். யார் எங்கே நிற்கிறார்கள், யார் மூன்றாவது இடத்தில் நிற்கிறார் என்று ரஜினி வரும்போது தெரியும். 2021-ல் ரஜினி எல்லாவற்றையும் அடித்துத் தூரத் தூக்கிப் போட்டுப் போய்விடுவார்,

ரஜினி எம்ஜிஆர் அல்லவே? எம்ஜிஆர்கூட திமுக என்கிற ஒரு கட்சி ஸ்தாபனத்திலிருந்துதான் வெளியில் வந்தார்? ரஜினி புதிதாக ஆரம்பிக்க வேண்டுமே?

ஆமாம். அந்த இடத்தில்தான் எம்ஜிஆரையும், ரஜினியையும் நான் ஒப்பிடவில்லை.

ஸ்தாபன ரீதியாக வலுவான அமைப்பை இதுவரை உருவாக்காத ரஜினி, திமுக, அதிமுக போன்ற வலுவான கட்சிகளை எதிர்த்து எப்படி வெல்வார்?

அதாவது ரஜினி 8 மாதங்களுக்கு முன்புதான் வருவார் என்று நான் சில ஆண்டுகள் முன்னரே தெரிவித்துள்ளேன். எம்ஜிஆர் திண்டுக்கல் தேர்தலில் 55% வாக்குகள் வாங்கியவர். அதன்பின்னர் பல காரணங்களால் வாக்கு சதவீதம் குறைந்து 77-ம் ஆண்டு 30.3% வாக்குகளைத்தான் வாங்க முடிந்தது. அதனால்தான் சொல்கிறேன். ரஜினி நேரடியாக சட்டப்பேரவைத் தேர்தலில் குதிப்பார் என்கிறேன். ரஜினி வரும்போது மையமானவராக (focus) மாறுவார். இந்த ஃபோகஸ் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமிக்குக் கிடைக்காது.

ரஜினி பெரிய அளவில் மக்களை ஒருங்கிணைக்கூடிய பிரபலம். அமைப்பு பலம் என்பது ரஜினிக்கு ஓரளவுக்குத்தான். அதை ரஜினி மக்கள் மன்றம் கொடுக்க முடியும். ஆனால், அவருக்கான அமைப்பு பலத்தை திமுக, அதிமுகவுடன் தேர்தல் கூட்டணியில் லாபம் இல்லாத கட்சிகள் வந்து தருவார்கள். காங்கிரஸ் கட்சிக்கு இந்த உள்ளாட்சித் தேர்தலில் எந்த லாபமும் இல்லை. சட்டப்பேரவைத் தேர்தலில் 41 தொகுதிகளில் நின்று, 8 தொகுதிகளில் மட்டுமே வென்றார்கள்.

ராகுல் காந்தியை மையப்படுத்திய மக்களவைத் தேர்தலில் ஒரு பெரிய வெற்றியைப் பெற்றார்கள், ஆனால் ஸ்வீப் இல்லாத தேர்தல்களில் திமுகவினர் தமிழ்த் தேசியவாதிகளாகத்தான் இருக்கிறார்கள். காங்கிரஸுக்கு மக்கள் முழுமையாக வாக்களிக்கவில்லை. அதனால் காங்கிரஸ் வெல்வதற்காகவும் சில காரணங்கள் தேவை. ரஜினி பாஜகவின் பக்கம் போகக்கூடாது என்பதற்காக ரஜினிக்கும் காங்கிரஸ் ஆதரவு அளிக்கலாம்.

டிடிவி தினகரனால் ஈபிஎஸ், ஓபிஎஸ் தலைமையை ஏற்றுக்கொள்ள முடியாது, ஸ்டாலினிடம் செல்வது என்பது பரம்பரை எதிரியுடன் கைகோர்ப்பது மாதிரி. அதனால் அவர் ரஜினியுடன் போகலாம்.

ராமதாஸ் தொடர் தோல்வியில் இருக்கிறார். அவருக்கு மும்முனைப் போட்டி வந்தால் எதிர்ப்பு ஓட்டுகள் சிதறும். அதை வைத்து வெற்றி பெற அவர் நினைக்கலாம். அதனால் திமுக, அதிமுக கூட்டணி அரசியலில் வெற்றி பெற முடியாத கட்சிகள் ரஜினி பக்கம் வருவார்கள்.

இவர்கள் வருவார்கள் என்றாலும் சரி. அதை ரஜினி ஏற்றுக்கொள்ளவேண்டுமே?

அதற்குள் நான் போகவில்லை. நான் ஊகத்தை மட்டுமே சொல்கிறேன். ரஜினி முடிவு செய்வது பற்றிச் சொல்லவில்லை. இவர்களுக்கு ரஜினி குறித்த ஆப்ஷன் லாபத்தைக் கொடுக்கும் என்பது என் எண்ணம்.

பெரிய கட்சிகள் ரஜினியுடன் இணையும்போது ரஜினிக்கு ஒரு கட்சி மாநிலம் முழுவதும் பலமாக இருக்க வேண்டும் அல்லவா? ரஜினி கட்சியே ஆரம்பிக்கவில்லையே?

அதுகுறித்து காங்கிரஸும் ராமதாஸும் தினகரனும் முடிவு பண்ணவேண்டியது. ரஜினி முடிவு பண்ண வேண்டியது. களம் வரும்போது எப்படி வரும் என்பதைப் பார்க்கலாம்.

அப்படியானால் ரஜினி என்பது 2021-ல் எதிர்ப்பார்ப்பு மட்டுமே? திமுக அதிமுகவுக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் பின்னடைவு இல்லை. அப்படித்தானே?

மாறுபட்ட சமூக நீதியைக் கையில் எடுத்தால் மக்களிடம் வரவேற்பு இருக்கும். அடித்துத் தூக்கிவிட்டுப் போய்விடுவார் ரஜினி. என்ன முடிவெடுக்க உள்ளார் என்பது பற்றித் தெரியாமல் இப்போது முடிவு செய்ய முடியாது அல்லவா?

ரஜினி மனதில் பட்டதைச் சட்டென்று பேசக்கூடியவர். அரசியலுக்கு அது சரிப்பட்டு வராது என்று சொல்கிறார்களே? நீட் விவகாரத்தில் சூர்யாவை ஆதரித்தது, தூத்துக்குடி சம்பவம் போகும்போது ஒரு எண்ணம் வரும்போது ஒரு முடிவு. இது அரசியலுக்குச் சரிப்பட்டு வருமா?

இதெல்லாம் விஷயமே கிடையது. கட்சி ஆரம்பித்து அவர் வரும்போது யாருக்காக வருகிறார்? எதற்காக வருகிறார்? என்ன சொல்லி வருகிறார்? மதச்சார்பின்மைக்காக நிற்பாரா? இந்துத்துவாவா? ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எப்படி எதிர்வினையாற்றப் போகிறார்கள் மற்ற அரசியவாதிகள்? ரஜினியை ஆதரிக்கும் அரசியல்வாதிகள் எப்படி ரோல் பண்ணப் போகிறார்கள்? மற்றவர்களுக்கு மக்களைத் திரட்டும் தகுதி என்ன? ரஜினிக்கு மக்களைத் திரட்டும் தகுதி என்ன? மக்கள் உணர்வைப் புரிந்து வருகிறாரா? இதுபோன்ற பல விஷயங்களை அலசி ஆராய்ந்துதான் முடிவுக்கு மக்கள் வருவார்களே தவிர பிறக்கும்போதே யாரும் வாக்கு வங்கியுடன் வந்ததில்லை.

ஸ்டாலின், விஜயகாந்த் போன்றோரை சமூக வலைதளங்களில் ட்ரால் செய்து ஒன்றுமில்லாதவர்கள் என்று காண்பிக்க முயலும் போக்கு உள்ளது. ரஜினிக்கும் இது நடக்கும் அல்லவா?

அது பிரச்சினையே இல்லை. ரஜினியிடம் பல வியூகங்கள் உள்ளன. ஜெயலலிதா நடத்திய அரசியல்போல் குறிப்பிட்ட சில சமூகங்களைத் தூக்கிவிட்டு அரசியலும் செய்யலாம். ஆனால், ரஜினி எல்லோருக்கும் பொதுவானவர். அவர் இப்படிக்கூட அரசியல் செய்யலாம் என்கிற வாய்ப்புள்ளது என்கிறேன்.

ரஜினியும் கமலும் அரசியலில் இணைவார்கள் என்று கருத்து வருகிறதே?

கமல் பெரிய வாக்கு வங்கி இல்லாதவர். 3.7% மட்டும்தான். அவர் ரஜினியுடனும் செல்லலாம், அல்லது ரஜினியின் வளர்ச்சியைப் பார்த்து மிரண்டு ஸ்டாலினுடனும் செல்லலாம்.

ரஜினியிடம் இன்னொரு பிரச்சினை உள்ளதே? பாஜக தலைவர்களுடன் நெருக்கமானவர் என்ற நிழல்தானே அவர் மீது படியும்?

காங்கிரஸுடன் பலமான கூட்டணி வைத்திருந்த கருணாநிதி, பின்னர் பாஜகவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து நெருக்கம் காட்டியவர். அவர் பிறகு காங்கிரஸ் பக்கம் செல்லவில்லையா? அதுபோல ரஜினி காங்கிரஸ் பக்கம் செல்ல வாய்ப்பு இருக்கும் அல்லவா?

ஆனால், ரஜினி ஆரம்பம் முதல் பாஜகவுடன் நட்பாகத்தானே இருக்கிறார்?

அப்படிச் சொல்ல முடியாது, யானையைப் பார்த்த பார்வையற்றோர் மாதிரி முடிவெடுக்க முடியாது.

அதையேதான் நானும் கேட்கிறேன். ரஜினி பாஜக பக்கம் போக அதிக வாய்ப்பு இருந்தால் அவருக்குப் பாதிப்பாக அது அமையுமா?

ஆமாம். நான் வெல்வார் என்று சொல்லவில்லை. அதைப் பொறுத்திருந்து பார்க்கலாம் என்கிறேன்.

இவ்வாறு ரவீந்திரன் துரைசாமி பதில் அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x