

10-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஆர்எஸ்எஸ் குறித்த தவறான வாசகத்தை நீக்க தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் 10-ம் வகுப்பு சமூக அறிவியல் இரண்டாம் பருவ பாடப் புத்தகத்தின் பக்கம் 50-ல் இந்து மதம், முஸ்லிம் மதம் குறித்த தலைப்பில், சுதந்திரத்திற்கு முன்பு ஆர்எஸ்எஸ் (ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம்) முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தது என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மற்றும் அதன் இயக்குனர் மீது ஆர்எஸ்எஸ் அமைப்பின் சென்னை மாவட்டச் செயலாளர் பி.சந்திரசேகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதியரசர் ஆதிகேசவலு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதியரசர் ஆதிகேசவலு, ''பள்ளிக் கல்வித்துறையால் பதிவிடப்பட்ட ஆட்சேபனைக்குரிய பகுதியினை நீக்க வேண்டும். இதற்கு முன்னால் மாணவர்களிடையே விநியோகம் செய்யப்பட்ட புத்ககங்களில் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க வேண்டும். வருங்காலத்தில் அச்சடிக்கும் புத்தகத்தில் மேற்கண்ட தவறான தகவல்களைப் பரப்பாவண்ணம் பார்த்துக்கொள்வது பள்ளிக் கல்வித்துறையின் கடமை.
மேலே சொல்லப்பட்ட உத்தரவுகளின் செயல்பாடுகள் குறித்த விவரங்களை பிரமாணப் பத்திரமாக வருகின்ற 22.1.2020 அன்று தாக்கல் செய்ய வேண்டும்'' என்று உத்தரவிட்டார்.