Published : 11 Jan 2020 06:43 PM
Last Updated : 11 Jan 2020 06:43 PM

மறைமுகத் தேர்தலில் அத்துமீறல்; அதிமுகவின் ஜனநாயகப் படுகொலை: முத்தரசன் கண்டனம்

திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வெற்றி பெறும் வாய்ப்புள்ள இடங்களில் ‘சட்டம்-ஒழுங்கை’ ஆளும் கட்சியினரே சீர்குலைத்து, தேர்தலை நடத்த மறுத்திருப்பது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கண்டித்துள்ளார்.

இதுகுறித்து முத்தரசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலைத் தொடர்ந்து மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர்கள் மற்றும் ஒன்றிய ஊராட்சிக்குழு தலைவர்கள் தேர்வுக்கான மறைமுகத் தேர்தல் இன்று (11.01.2020) நடைபெறுகிறது.

உள்ளாட்சித் தேர்தலில் மறைமுகத் தேர்தலுக்கான சட்டத்திருத்தம் கொண்டு வந்தபோதே ஆளும் அதிமுக அரசு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, மாநிலத் தேர்தல் ஆணையத்தின் மீது அழுத்தம் கொடுத்து தேர்தல் முடிவுகளை தனக்கு சாதகமாக அறிவித்துக் கொள்ளும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்திருந்தது. சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

எதிர்பார்த்தது போலவே திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் பெரும்பான்மை பெற்ற ஒன்றியங்களில் தலைவருக்கான தேர்தல்கள் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து அறிவிக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றியத்தில் மொத்தமுள்ள 13 வார்டுகளில் 7 வார்டு உறுப்பினர்களின் வாக்குகளை திமுக கூட்டணி வேட்பாளர் பெற்றிருந்தார். அதனைத் திரும்ப, திரும்ப எண்ண வைத்து, இறுதியில் அதிமுகவினர் தேர்தல் மையத்தில் அத்துமீறி நுழைந்து கலகம் செய்ததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தும் அலுவலருக்கு ‘திடீர் உடல்நலக் குறைவு(!)’ ஏற்பட்டால் என்ன செய்வது என்பதை மாநிலத் தேர்தல் ஆணையம் சிந்திக்க மறந்ததால் (!!) பல இடங்களில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும், வெற்றி பெறும் வாய்ப்புள்ள இடங்களில் ‘சட்டம்-ஒழுங்கை’ ஆளும் கட்சியினரே சீர்குலைத்து, தேர்தலை நடத்த மறுத்திருப்பது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். அதிமுகவின் அதிகார அத்துமீறலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது”.

இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x