Published : 11 Jan 2020 05:46 PM
Last Updated : 11 Jan 2020 05:46 PM

ஜனவரி 19-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்; 7.03 லட்சம் குழந்தைகள் இலக்கு: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஜன.19 அன்று நடைபெறும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிப் பயனடையுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பு:

''கடந்த 24 வருடங்களாக அகில இந்திய அளவில் தீவிர கூடுதல் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தொடர்ந்து 25-வது ஆண்டாக இந்த ஆண்டு ஜன.19 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது.

இது தொடர்பான தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் நாளான ஜன.19, 2020 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பெருநகர சென்னை மாநகரில் 5 வயதிற்குட்பட்ட சுமார் 7.03 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கு 1,645 சொட்டு மருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை போலியோ நோய் இல்லாத நாடாக அறிவித்துள்ள போதிலும், அண்டை நாடுகளில் போலியோ நோய் தாக்கம் இருப்பதால் போலியோ நோய்க்கிருமி பரவும் அபாயம் உள்ளது. இதனால், இந்த வருடமும் போலியோ சொட்டு மருந்து முகாம் பணிகளைத் தீவிரமாக மேற்கொள்ள வேண்டியுள்ளது.

பெற்றோர்களாகிய நீங்கள், உங்கள் 5 வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். உங்கள் வீட்டின் அருகில் உள்ள சொட்டு மருந்து மையத்திற்குச் சென்று, உங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ள வேண்டும். சொட்டு மருந்தைக் குழந்தைகளுக்குக் கொடுத்தவுடன் இடது கை சுண்டுவிரலில் அடையாள மை வைக்கப்படும்.

எந்த ஒரு குழந்தையும் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதில் இருந்து விடுபடாமல் இருப்பதற்கு அடையாள மை வைக்கப்படுகிறது. போலியோ சொட்டு மருந்து போடுவதால் எந்தவிதத் தீங்கும் கிடையாது.

ஆகவே, அனைத்துக் குழந்தைகளும் போலியோ சொட்டு மருந்தை ஒரே நாளில் போட்டுக் கொள்வதன் மூலம், போலியோ நோய் பரவும் வைரஸ் கிருமிகள் அவர்களது ஜீரண மண்டலத்திலிருந்து அகற்றப்பட்டு அழிக்கப்படுகின்றது. இதன் மூலம் போலியோ நோயைப் பரப்பும் வைரஸ் கிருமிகளை சுற்றுச்சூழலிலிருந்து அறவே ஒழிக்கலாம்.

குழந்தைகளுக்கு ஏற்கெனவே போலியோ சொட்டு மருந்து முறையாகக் கொடுத்திருந்தாலும் 19.01.2020 அன்று நடைபெறும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமில் அவசியம் சொட்டு மருந்தை குழந்தைகளுக்குப் போட வேண்டும். முகாம் நாட்களில் கொடுக்கப்படும் சொட்டு மருந்தும் வழக்கமான தவணைகளில் கொடுக்கப்படும் சொட்டு மருந்தும் மாற்று மருந்து அல்ல. இது ஒரு கூடுதல் தவணையாகும்.

தீவிர போலியோ சொட்டு மருந்து 19.01.2020 அன்று குழந்தைகளுக்குக் கொடுப்பதற்கு பெருநகர சென்னை மாநகராட்சி நலவாழ்வு மையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், மருந்தகங்கள், சத்துணவு மையங்கள், தனியார் மருத்துவமனைகள், ரயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களில் சொட்டு மருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் மெரினா கடற்கரை, சுற்றுலாப் பொருட்காட்சி, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையங்களில் நடமாடும் சொட்டு மருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் காலை 7.00 மணிக்குத் தொடங்கி, இடைவெளியின்றி மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெறும்.

சொட்டுமருந்து முகாம்களில் சிறப்பாகப் பணி செய்ய பல்வேறு அரசுத்துறை பணியாளர்கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், அங்கன்வாடி அலுவலர்கள், மாநகராட்சிப் பணியாளர்கள் மற்றும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட சுமார் 7,000 நபர்கள் ஈடுத்தப்பட்டுள்ளனர்.

2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நடைபெற்ற போலியோ சொட்டுமருந்து முகாமின் குழந்தைகளின் எண்ணிக்கை பயனாளிகளின் எண்ணிக்கை சதவீதம்

2018-ம் ஆண்டு முதல் தவணை குழந்தைகளின் எண்ணிக்கை 7,05,802. பயனடைந்தவர்கள் எண்ணிக்கை 7,49,436. மொத்தம் 106.2 சதவீதம்

2018-ம் ஆண்டு 2-வது தவணை குழந்தைகளின் எண்ணிக்கை 7,11,897. பயனடைந்தவர்கள் எண்ணிக்கை 7,50,902. மொத்தம் 105.5 சதவீதம்.

10.03.2019-ம் ஆண்டு குழந்தைகளின் எண்ணிக்கை 7,14,047. பயனடைந்த குழந்தைகளின் எண்ணிக்கை 7,55,596. மொத்தம் 105.8 சதவீதம்''.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x