

ரஜினி நடித்து வெளியாகியுள்ள 'தர்பார்' படத்துக்குப் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி லைகா நிறுவனம் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் மும்பை காவல் ஆணையராக நடித்து வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'தர்பார்' படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தை இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியிட 1300-க்கும் மேற்பட்ட இணைய தளங்களுக்கு உயர் நீதிமன்றம் தடைவிதித்தது. மேலும், 370-க்கும் மேற்பட்ட செல்போன் சேவை நிறுவனங்கள் இணையதளங்களில் படத்தை வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இன்று லைகா நிறுவனம் சார்பில் தலைமைச் செயல் அதிகாரி கண்ணன் தரப்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரில், ''ரஜினியின் 'தர்பார்' முழுப் படத்தையும் வாட்ஸ் அப்பில் பகிர்வதாகவும், அவ்வாறு பகிர்வதால் படத் தயாரிப்பு நிறுவனம், விநியோகஸ்தர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.
வாட்ஸ் அப்பில் படம் பகிரப்பட்டால் ஆடியன்ஸ் தியேட்டருக்குப் படம் பார்க்க வரமாட்டார்கள். இதனால் பட வருமானம் பாதிக்கப்பட்டு பெருத்த நஷ்டம் ஏற்படும். ஆகவே 'தர்பார்' படத்தை வாட்ஸ் அப்பில் பகிர்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்''.
அவருடன் தயாரிப்பாளர்கள் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, கே.ராஜன் உள்ளிட்டோர் வந்தனர்.
சிவா அளித்த பேட்டியில் 'தர்பார்' படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதைச் சீர்குலைக்கும் விதமாக வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ் வருகிறது. அதில் 'தர்பார்' படத்தை வாட்ஸ் அப்பில் 3 பாகங்களாகப் பிரித்துப் பகிர்கிறோம், அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க. படம் ஓடக்கூடாது. அவ்வளவுதான் என்று பேசியுள்ளார்.
இதுகுறித்து காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம். அவர் சைபர் பிரிவுக்கு இதை மாற்றியுள்ளார். டிராக் போட ஆரம்பித்துவிட்டார்கள். யாராவது பார்த்தாலோ பகிர்ந்தாலோ சிக்குவார்கள்.
படத்தை தியேட்டரில் பதிவு செய்துள்ளார்கள். அது எந்த தியேட்டர் என்று கியூப் மூலம் சோதித்து வருகிறோம். அந்த தியேட்டர் தெரிந்தவுடன் நடவடிக்கை பாயும்” என்று சிவா தெரிவித்தார்.
பின்னர் லைகா கண்ணன், ராஜன் உள்ளிட்டோரும் இதே கருத்தைச் தெரிவித்தனர்.