

திருவள்ளூர் மாவட்ட ஊராட்சித் தலைவராக திமுகவைச் சேர்ந்த உமா மகேஸ்வரி போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் ஆகிய 10 ஆயிரத்து 300 உள்ளாட்சிப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் இன்று (ஜன.11) நடைபெற்று வருகிறது. உயர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியின்படி, மறைமுகத் தேர்தல் முழுவதும் ஆடியோ இல்லாத வீடியோவாகப் பதிவு செய்யவும் மாநிலத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட ஊராட்சித் தலைவராக திமுகவைச் சேர்ந்த உமா மகேஸ்வரி என்பவர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். இவர் திமுக திருவள்ளூர் வடக்கு மாவட்டச் செயலாளரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில், ஒன்றியக்குழு பெருந்தலைவர்களாக 6 ஒன்றியங்களில் திமுகவைச் சேர்ந்தவர்களும், 4 ஒன்றியங்களில் அதிமுகவைச் சேர்ந்தவர்களும் வெற்றி பெற்றனர்.
மீதமுள்ள 4 ஒன்றியங்களான திருத்தணி, ஆர்.கே.பேட்டை, திருவாலங்காடு, பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியங்களில் போதிய உறுப்பினர்கள் வராததால் மறைமுகத் தேர்தல் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.