

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஒன்றியக்குழு தலைவருக்கான மறைமுகத் தேர்தலை நடத்தவிடாமல் அதிமுகவினர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் ஆகிய 10 ஆயிரத்து 300 உள்ளாட்சிப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் இன்று (ஜன.11) நடைபெற்று வருகிறது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற ஒன்றிய கவுன்சிலர்கள் ஒன்றியக் குழு தலைவரைத் தேர்ந்தெடுக்கும் மறைமுகத் தேர்தல் சாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று (ஜன.11) நடைபெறுகிறது. இதில் 16 ஒன்றிய கவுன்சிலர்களுள், திமுக 8, அதிமுக 5, மதிமுக 2, பாஜக 1 கவுன்சிலர்களைப் பெற்றிருந்தன.
திமுகவுக்கு அதிகபட்ச கவுன்சிலர்கள் உள்ளதால் திமுக சார்பில் ஒன்றிய குழுத் தலைவர் வேட்பாளராக 2-வது வார்டு கவுன்சிலர் நிர்மலா கடற்கரை என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் வசந்தா தேவதுரை என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார்.
திமுக அதிக பலத்துடன் உள்ளதால் ஒன்றியத் தலைவர் பதவிக்கு திமுக வந்துவிடும் என்பதால், உறுப்பினர்களை வேட்புமனுத் தாக்கல் செய்ய விடாமல் அதிமுகவினர் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.