

விருதுநகர் மாவட்டத்தில் ஒன்றியத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலின்போது மர்ம நபர்கள் கலவரத்தில் ஈடுபட்டதில் டிஎஸ்பி வெங்கடேஷுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் ஆகிய 10 ஆயிரத்து 300 உள்ளாட்சிப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் இன்று (ஜன.11) நடைபெற்று வருகிறது. உயர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியின்படி, மறைமுகத் தேர்தல் முழுவதும் ஆடியோ இல்லாத வீடியோவாக பதிவு செய்யவும் மாநிலத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஒன்றியத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலின்போது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களைத் தடுக்க முயன்ற அருப்புக்கோட்டை டிஎஸ்பி வெங்கடேஷுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக கலவரத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் இருவரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.