Published : 11 Jan 2020 01:57 PM
Last Updated : 11 Jan 2020 01:57 PM

கடல் மேலாண்மை சட்டத்தை மீறி மெரினா கடற்கரை லூப் சாலையில் நடைபாதை, மழை நீர் வடிகால் அமைக்க முயற்சி: மீனவர்கள் எதிர்ப்பு

கடல் மேலாண்மை சட்டத்தை மீறி சென்னை மெரினா கடற்கரையில் லூப் சாலையில் நடைபாதை அமைப்பதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடற்கரை மண்டல ஒழுங்குமுறை குழுமத்திடம் மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து தென் இந்திய மீனவர் நலச்சங்கம் சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கை:

“சென்னை மெரினா கடற்கரை பகுதியில் மீன்கடை வைத்திருக்கும் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது, நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான வழக்குகள் கடந்த 8-ம் தேதி, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

ஏற்கெனவே இந்த வழக்கில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், மெரினா கடற்கரையில் தற்போதைய நிலையில் 1,962 கடைகள் இயங்கி வரும் நிலையில், அவற்றை ஒழுங்குபடுத்தும் விதமாக 27.04 கோடி ரூபாய் செலவில் 7 அடி நீளம்,3 அடி அகலத்திலான ஒரே மாதிரியான 900 கடைகளை மாநகராட்சியே அமைத்து கொடுத்து ஸ்மார்ட் கார்டுகள் விநியோகிக்க இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், கலங்கரை விளக்கம் அருகில் 2 ஏக்கர் பரப்பளவில் மீன் வியாபாரிகளுக்கு ரூபாய் 66லட்சம் செலவில் 300 தற்காலிக மீன் விற்பனை கடைகள் அமைக்கப்பட உள்ளதாகவும், கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்திடம் உரிய அனுமதி பெற்ற பின் நிரந்தர மீன் அங்காடி அமைக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது

8-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.ஆர் ராஜகோபால், கலங்கரை விளக்கம் முதல் பட்டினம்பாக்கம் வரை லூப் சாலையில் நடைபாதை அமைக்க திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மாநகராட்சி கொடுத்துள்ள விண்ணப்பத்தை பரிசீலிக்குமாறு கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், மெரினா கடற்கரையில் மாநகராட்சி சார்பில் அமைத்து கொடுக்கப்படவுள்ள புதிய கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு கண்டிப்புடன் தவிர்க்கப்பட வேண்டும்.

எனவும், அதை மாநகராட்சி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டுமெனவும் அறிவுறுத்தி கடைகள் வடிவமைப்பு மற்றும் எத்தனை கடைகளுக்கு அனுமதி தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் 22-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இந்த நிலையில் மாநகராட்சியின் இந்த முடிவிற்கு நொச்சிக்குப்பம், பட்டினப்பாக்கம் பகுதி மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தென்னிந்திய மீனவர் நலச் சங்கம் சார்பில் கடற்கரை மண்டல ஒழுங்குமுறை குழுமத்திடம் அளிக்கப்பட்ட புகார் மனுவில், ஏற்கெனவே மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரைவுள்ள லூப் சாலை திட்டத்திற்காக பெருநகர சென்னை மாநகராட்சிக்கு கடலோர ஒழுங்குமுறை மண்டலம் (CRZ) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அந்த அனுமதியில் ஏற்கெனவே இருக்கும் தார் சாலையை அகற்றி சிமெண்ட் சாலை அமைக்க மட்டுமே முடியும், லூப் சாலையின் கிழக்கு பகுதியில் நடைபாதை மற்றும் மழை நீர் வடிகால்வாய்கள் அமைக்க முடியாது என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பிலும் லூப் சாலையின் கிழக்கு பகுதியில் நடைபாதை மற்றும் மழை நீர் வடிகால்வாய்கள் அமைக்க முடியாது என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது.

ஆகவே லூப் சாலையின் கிழக்கு பகுதியில் நடைபாதை அமைக்க பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சட்டத்தை மீறி அனுமதி வழங்க கூடாது என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது”.

இவ்வாறு அவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x