

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலுக்கு பகல் 12 மணி வரை தேர்தல் நடத்தும் அலுவலர் வராததால் குழப்பம் ஏற்பட்டது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் ஆகிய 10 ஆயிரத்து 300 உள்ளாட்சிப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் இன்று (ஜன.11) நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 19 வார்டு உறுப்பினர்களில், திமுக 8 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட், தேமுதிக தலா ஒரு இடங்களும், அதிமுக 5 இடங்களும், சுயேச்சைகள் 4 இடங்களும் பெற்றனர்.
இந்நிலையில் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் இன்று காலை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் தடுப்புகள் அமைத்து போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். காலை 10 மணியளவில் 19 வார்டு உறுப்பினர்களும் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்ட அரங்குக்கு வந்தனர். அவர்களிடம் வருகைப் பதிவேட்டில் கையெழுத்து பெறப்பட்டது. ஆனால், பகல் 12 மணி வரை கூட்டுறவு சங்க துணைப் பதிவாளரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஜெயசீலன் வரவில்லை. இதனால் சுமார் 2 மணி நேரம் அரங்கிலேயே உறுப்பினர்கள் காத்திருந்தனர்.
வெளியே காத்திருந்த அதிமுக மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களிடையே யார் வெற்றி பெற்றார்கள் என பெரிய விவாதம் நடந்து கொண்டிருந்தது. இதனால் அங்கு குழப்பம் ஏற்பட்டது.