

கயத்தாறு ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவராக அமமுகவின் தென்மண்டலச் செயலாளர் மாணிக்கராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் ஆகிய 10 ஆயிரத்து 300 உள்ளாட்சிப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் இன்று (ஜன.11) நடைபெற்று வருகிறது. உயர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியின்படி, மறைமுகத் தேர்தல் முழுவதும் ஆடியோ இல்லாத வீடியோவாக பதிவு செய்யவும் மாநிலத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 16 வார்டுகளில் 10 வார்டுகளில் அமமுக வெற்றி பெற்றது. சுயேச்சையாக வெற்றி பெற்ற ஒரு உறுப்பினரும் அமமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார்.
இந்நிலையில், அமமுகவின் தென்மண்டலச் செயலாளர் மாணிக்கராஜா கயத்தாறு ஒன்றியப் பெருந்தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த ஊராட்சி ஒன்றியம் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவின் சொந்த ஊர் அடங்கிய ஒன்றியம். அமைச்சரின் சொந்த வார்டிலும் அமமுகவே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.