Last Updated : 11 Jan, 2020 11:34 AM

 

Published : 11 Jan 2020 11:34 AM
Last Updated : 11 Jan 2020 11:34 AM

சேலம் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியை கைப்பற்றுகிறது அதிமுக

சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களில் 16 இடங்களில் ஒன்றியக்குழு தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றுகிறது. மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் பதவியும் அதிமுகவின் வசமாகிறது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில், சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களிலும் 288 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக 131 வார்டுகளிலும், அதன் கூட்டணிக் கட்சிகளான பாமக 39 வார்டுகளிலும், தேமுதிக 5 வார்டுகளிலும், தமாகா 1 வார்டிலும் வெற்றி பெற்றது.

திமுக கூட்டணியில், திமுக 76 வார்டுகளிலும், அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் 4 வார்டுகளிலும், இடதுசாரிகள் 2 வார்டுகளிலும், மதிமுக 1 வார்டிலும் வெற்றி பெற்றன. ஒட்டுமொத்தமாக, அதிமுக கூட்டணிக்கு 176 வார்டுகளும், திமுக கூட்டணிக்கு 83 வார்டுகளும் கிடைத்தன. சுயேட்சைகள் 29 வார்டுகளில் வெற்றி பெற்றன.

இதனிடையே, 176 வார்டுகளைக் கைப்பற்றியுள்ள அதிமுக கூட்டணி, மாவட்டத்தின் 20 ஊராட்சி ஒன்றியங்களில், 16 இடங்களில், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் பதவியை கைப்பற்றும் நிலையில், பெரும்பான்மை பெற்றுள்ளது.

அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 19 வார்டுகளில் திமுக கூட்டணி 7 வார்டுகளையும், அதிமுக கூட்டணி 6 வார்டுகளையும் கைப்பற்றியுள்ளன. எனினும், இந்த ஒன்றியத்தில் சுயேட்சைகள் 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், இங்கும் அதிமுகவுக்கு சாதகமான நிலை நிலவுகிறது.

சேலம், ஏற்காடு, கெங்கவல்லி ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்களில் இழுபறியும் நீடிக்கிறது. சேலம் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 10 வார்டுகளில் அதிமுக 5 வார்டுகளையும், திமுக 4, காங்கிரஸ் 1 என திமுக கூட்டணி 5 வார்டுகளையும் கைப்பற்றியுள்ளதால் இங்கு ஒன்றியக்குழு தலைவர் பதவியைக் கைப்பற்றுவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 6 வார்டுகளில், அதிமுக மற்றும் திமுக தலா 3 வார்டுகளைக் கைப்பற்றியுள்ளதால், இங்கு சமநிலை ஏற்பட்டு, சிக்கல் உருவாகியுள்ளது.

இதேபோல், கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்தமுள்ள 11 வார்டுகளில் அதிமுக மற்றும் திமுக தலா 5 வார்டுகளைக் கைப்பற்றியுள்ளன. ஒரு வார்டில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். எனவே, இங்கும் இழுபறி ஏற்பட்டுள்ளது.

மாவட்ட ஊராட்சிக் குழு

சேலம் மாவட்டத்தில், மாவட்ட ஊராட்சிக்கான 29 வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில், அதிமுக 18 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகள் 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

மொத்தம் 28 வார்டுகளில் போட்டியிட்ட திமுக 5 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணியில் ஒரு வார்டில் போட்டியிட்ட காங்கிரஸ் அதில் வெற்றி பெறவில்லை.

மாவட்ட ஊராட்சி வார்டு தேர்தலில், 18 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ள அதிமுக, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இன்றியே மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியை கைப்பற்றுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x