Published : 11 Jan 2020 10:44 AM
Last Updated : 11 Jan 2020 10:44 AM

தோட்டக்கலை உற்பத்தியை பெருக்க தனி பல்கலை. தொடங்க வேண்டும்: ராமதாஸ்

சேலம் மாவட்டம் கருமந்துறை தமிழக அரசு தோட்டக்கலை பண்ணை வளாகத்தில் தமிழ்நாடு தோட்டக்கலை பல்கலைக்கழகத்தைத் தொடங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று (ஜன.11) வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் தோட்டக்கலைப் பயிர்களின் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சிக்கு சாதகமாக ஆயிரமாயிரம் அம்சங்கள் இருந்தாலும், அவற்றை ஆக்கப்பூர்வமான வகையில் மேம்படுத்த தோட்டக்கலைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமல் இருப்பது ஏமாற்றமளிக்கிறது. விவசாயிகளின் வருவாயைப் பெருக்குவதற்கு இது தான் பெரும் தடையாக உள்ளது.

இந்திய அளவில் தோட்டக்கலைப் பொருட்கள் உற்பத்தித் திறனில் தேசிய சராசரியை விட தமிழகம் முன்னணியில் இருந்தாலும் கூட, அவற்றின் சாகுபடி பரப்பில் தமிழகம் மிகவும் பின்தங்கிய நிலையில் தான் உள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த வேளாண் பரப்பில் தமிழகத்தின் பங்கு சுமார் 10 விழுக்காடாக இருக்கும் நிலையில், தோட்டக்கலைப் பொருட்கள் சாகுபடி பரப்பில் தமிழகத்தின் பங்கு தேசிய அளவில் 5.4% ஆக உள்ளது. அதாவது தமிழகத்தில் 13.89 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மட்டும் தான் சாகுபடி நடைபெறுகிறது. இந்தப் பரப்பளவிலிருந்து 182.03 லட்சம் டன் தோட்டக்கலைப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒரு ஹெக்டேருக்கு 13.11 டன்கள் என்ற அளவில் உற்பத்தித் திறன் உள்ளது. இது தேசிய சராசரியை விட அதிகம் என்பது தமிழ்நாடு பெருமிதப்பட வேண்டிய அம்சம் ஆகும்.

அதேபோல், தமிழ்நாட்டில் 7 வேளாண் காலநிலை மண்டலங்கள் உள்ளன; பருவமில்லா காலங்களிலும் மாம்பழம் விளைகிறது; தேனி, திண்டுக்கல், கோவை மாவட்டங்களில் 2,161 ஹெக்டேரில் ஆண்டுக்கு இரு முறை திராட்சை அறுவடை செய்யப்படுகிறது. இவை அனைத்தும் தோட்டக்கலைப் பொருட்களின் உற்பத்தியை தமிழகத்தில் அதிகரிக்கச் செய்வதற்கு சாதகமான அம்சங்கள் ஆகும்.

தோட்டக்கலைப் பயிர்கள் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல், உலக அளவில் கண்டுபிடிக்கப்படும் அதிநவீன தொழில்நுட்பங்களை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் தோட்டக்கலைப் பயிர்களின் விளைச்சலையும், உற்பத்தித்திறனையும் அதிகரிக்க முடியும். இப்பணிகள் அனைத்தையும் ஒருங்கிணைக்க தோட்டக்கலை பல்கலைக்கழகத்தை தமிழ்நாட்டில் உடனடியாக தொடங்க வேண்டியது அவசியமாகும்.

தமிழ்நாட்டில் தோட்டக்கலைப் பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கான கட்டமைப்புகள் தயாராக உள்ளன. தமிழகத்தில் 4 தோட்டக்கலைக் கல்லூரிகள், ஒரு முதுநிலை தோட்டக்கலை கல்வி நிறுவனம், ஒரு வனக்கல்லூரி, ஒரு பட்டுவளர்ப்புக் கல்லூரி ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இவை தவிர பல பட்டயக் கல்லூரிகளும் உள்ளன. இவற்றில் தோட்டக்கலை சார்ந்த பட்டயப் படிப்புகளில் தொடங்கி, முனைவர் பட்ட ஆராய்ச்சிப் படிப்புகள் வரை கற்பிக்கப்படுகின்றன. இவை தவிர தோட்டக்கலைக்காக 11 முழுநேர ஆராய்ச்சி நிலையங்கள், 10 பகுதி நிலை ஆராய்ச்சி நிலையங்கள், 61 தோட்டக்கலைப் பண்ணைகள், 7 தோட்டக்கலைப் பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன. கூடுதலாக மத்திய அரசின் சார்பில் 18 ஆராய்ச்சித் திட்டங்களும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் தமிழகத்தில் தோட்டக்கலைப் பல்கலைக்கழகம் தொடங்குவது மிகவும் எளிதானது ஆகும்.

இந்தியாவில் வேளாண்மை சார்ந்த பல்கலைக்கழகங்களைத் தொடங்குவதில் தமிழகம் தான் முன்னணியில் உள்ளது. இந்தியாவில் கால்நடைப் பல்கலைக்கழகம், மீன்வளப் பல்கலைக்கழகம் ஆகியவை தமிழகத்தில் தான் முதலில் தொடங்கப்பட்டன. ஆனால், தோட்டக்கலைப் பல்கலைக்கழகத்தைப் பொருத்தவரை 35 ஆண்டுகளுக்கு முன் 1985-ம் ஆண்டில் இமாலய பிரதேசத்திலும், 2000-ஆவது ஆண்டுக்கு பிறகு ஆந்திரம், கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் தொடங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தைப் பொருத்தவரை பெரியகுளத்தில் இப்பல்கலைக்கழகம் அமைக்கப் படும் என 2005-ம் ஆண்டிலும், சேலத்தில் அமைக்கப்படும் என்று 2011-ம் ஆண்டிலும் அறிவிக்கப்பட்ட போதிலும் அவை செயல்வடிவம் பெறவில்லை. அதற்கு சரியான நேரம் இப்போது வந்துள்ளது.

நெல், தானியங்கள் போன்ற பயிர்களைப் பயிரிடுவதை விட காய்கறிகள், பழங்கள், மலர்கள் போன்ற தோட்டக்கலைப் பொருட்களை பயிரிடுவதன் மூலம் விவசாயிகள் அதிக வருவாய் ஈட்ட முடியும். இதை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாட்டில் தோட்டக்கலை பல்கலைக்கழகத்தை தொடங்க அரசு முன்வர வேண்டும்.

சேலத்தில் இரும்பாலை வளாகத்தில் பயன்படுத்தப்படாமல் கிடக்கும் நிலம் அல்லது சேலம் மாவட்டம் கருமந்துறை தமிழக அரசு தோட்டக்கலை பண்ணை வளாகத்தில் தமிழ்நாடு தோட்டக்கலை பல்கலைக்கழகத்தைத் தொடங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x