

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடாத தால் கட்சிக்கு பின்னடைவு இல்லை என மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
மக்கள் நீதி மய்யத்தின் மாநில, மண்டல புதிய பொறுப் பாளர்களுடனான கலந்துரையாடல், கிராம சபை விழிப்புணர்வு கருத்தரங்கம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. மய்யத் தலைவர் கமல்ஹாசன் தலைமை வகித்து, கட்சியின் வளர்ச்சிக்காக மேற்கொள்ள வேண்டிய செயல்கள், கிராம சபையின் முக்கியத்துவம் உள்ளிட்டவை குறித்துப் பேசினார்.
இதில் துணைத் தலைவர் மகேந்திரன், பொதுச் செயலாளர்கள் அருணாச்சலம், மவுரியா, சி.கே.குமரவேல், உமாதேவி, திருச்சி மண்டல மாநிலச் செயலாளர் முருகானந்தம், இளைஞரணிச் செயலாளர் கவிஞர் சினேகன், சென்னை மண்டல மாநிலச் செயலாளர் கமீலா நாசர், நற்பணி இயக்க மாநிலச் செயலாளர் தங்கவேல், நடிகை பிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து திருச்சி - தஞ்சை சாலையில் பெல் கணேசபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் நீதி மய்யத்தின் 3-வது தலைமை அலுவலகத்தை கமல்ஹாசன் திறந்து வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடாததால் மக்கள் நீதி மய்யத்துக்கு எந்த பின்னடைவும் இல்லை. தமிழகத்தில் திராவிட அரசியல் சரியான திசையில் செல்லவில்லை என்பதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை. அனைவருக்கும் தெரிந்த உண்மை. கெட்டுப் போய் விட்டது என்று சொல்லிக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. நாம் என்ன செய்ய வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
நாங்கள் என்றைக்கும் வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டோம். நேர்மையாக இருப்பது எந்த காலத்திலும் சாத்தியம். பெண்களுக்கு கற்பு பற்றி சொல்லித்தர வேண்டிய தில்லை. அவரவர் விருப்பம்.
தமிழகத்தில் வெற்றிடம் இல்லை. இடம் இருக்கிறது. மக்கள் மனதில் பெறக்கூடிய இடம் அது. தகுதியானவர்கள் அதற்கு வர வேண்டும் என்பதே விருப்பம்.
திமுக- காங்கிரஸ் கூட்டணியில் உள்ளாட்சித் தேர்தல் இட ஒதுக்கீட்டில் மட்டுமல்ல. அனைத்து விஷயங்களிலும் முரண்பாடு உள்ளது. திமுக கூட்டணியில் நாங்கள் சேரலாம் என பேச்சு எழுவதாக கூறுகிறீர்கள். எந்தக் கூட்டணியில் சேர வேண்டும் என்பதை நாங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். யாரோ முடிவெடுக்கக் கூடாது. தர்பார் படத்தில் சசிகலா குறித்த மறைமுக வசனத்தை நீக்குவதாக கூறியுள்ளதும் ஒரு ஷாப்பிங் தான் என்றார்.