

பனிப்பொழிவு காரணமாக, மல்லிகைப்பூ விளைச்சல் குறைந்ததால், சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகை கிலோ ரூ.3300-க்கு விற்பனையானது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிக்கரசம் பாளையம், தாண்டாம்பாளையம், கெஞ்சனூர், இக்கரை தத்தப்பள்ளி, பகுத்தம்பாளையம், கொத்தமங்கலம், பவானிசாகர், ஆலாம்பாளையம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்லிகைப்பூ பயிரிடப்பட்டுள்ளது.
இங்கு விளையும் பூக்கள் சத்தியமங்கலம் பூமார்க் கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு ஏல முறையில் விலை நிர்ணயம் செய்து கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழக நகரங்களுக்கும், திருவனந்தபுரம், எர்ணாகுளம், மைசூரு, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட வெளிமாநில நகரங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
தற்போது கடும்பனிப்பொழிவு காரணமாக மல்லிகைச்செடியில் உள்ள அரும்புகளில் பூ மொட்டுகள் கருகி விடுவதால் மல்லி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக சத்தியமங் கலம் பூமார்க்கெட்டிற்கு வழக்கமாக 6 டன் வரத்து இருந்த நிலையில் தற்போது வரத்து 1 டன்னாக குறைந்தது. வரத்து குறைவு காரணமாக மல்லி விலை அதிகரித்துள்ளது. நேற்று சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.3300-க்கு விற்பனையானது.
இதேபோல் முல்லை கிலோ ரூ.1120-க்கும், காக்கடா ரூ.1325-க்கும் விற்பனையானது. பனிக்காலம் முடியும் வரை மல்லிகைப் பூ விளைச்சல் குறைவாக இருக்கும் என்பதால், தை மாதம் முடிந்து மாசி மாதத்தில் பூக்கள் வரத்து அதிகரிக்கும் என மல்லி பயிரிட்டுள்ள விவசாயிகள் தெரிவித்தனர்.