

கோவையில் 13 தெருநாய்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறை யினர் விசாரித்து வருகின்றனர்.
கோவை ராமநாதபுரம் அருகே சுப்பையன் வீதி உள்ளது. இப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. கடந்த 10 நாட்களுக்கு முன்னர் அப்பகுதியில் சுற்றித் திரிந்த 10 தெருநாய்கள் மர்ம நபர்களால் விஷம் வைத்துக் கொல்லப்பட்டன. இதைத் தொடர்ந்து நேற்று காலை சுப்பையன் வீதியின் வெவ்வேறு இடங்களில் மேலும் 3 தெருநாய்கள் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தன.
இதுபற்றி பொதுமக்கள் அளித்தபுகாரின்பேரில், ராமநாதபுரம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இரவு நேரங்களில் இந்த சாலை வழியாக செல்லும்போது குரைத்து தொந்தரவு செய்ததால் மர்மநபர்கள் விஷம் வைத்து தெருநாய்களை கொலை செய்தனரா அல்லது குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நோக்கில்அதற்கு இடையூறாக இருப்பதால் கொன்றனரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.