

உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் அமைப்பதற்காக 5 அடி உயர திருவள்ளுவர் கற்சிலை மாமல்லபுரத்தில் தயாராகி வருகிறது.
ஹரித்வாரில் கங்கை நதிக் கரையில் திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கான முயற்சியில் உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. தருண் விஜய் ஈடுபட்டுள்ளார். ஹரித்வார் உத்தராகண்ட் மாநிலத்தில் இருந்தாலும், கங்கை கரையில் சிலை அமைக்கப்படவுள்ள இடம் உத்தரப்பிரதேச மாநில நீர்ப்பாசனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
கடந்த 16-ம் தேதி லக்னோவில் உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவை சந்தித்த தருண் விஜய், திருவள்ளுவர் சிலை அமைக்க கங்கை கரையில் நிலம் ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
அப்போது தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் நவநீதகிருஷ்ணன் (அதிமுக), திருச்சி சிவா, கே.பி.ராமலிங்கம், எஸ்.தங்கவேலு (திமுக), சுதர்சன நாச்சியப்பன் (காங்கிரஸ்) மற்றும் ஐக்கிய ஜனதாதள எம்.பி. கே.சி.தியாகி ஆகியோர் கையெழுத்திட்ட மனுவையும் அகிலேஷ் யாதவிடம் தருண் விஜய் வழங்கினார்.
ஹரித்வாரில் அமைப்பதற்காக 5 அடி உயர திருவள்ளுவர் சிலையை மாமல்லபுரத்தில் சிற்பி கிருஷ்ணமூர்த்தி உருவாக்கி வருகிறார். இதற்கான செலவுகளை சாமி தியாகராஜன் தலைமையிலான திருவள்ளுவர் திருநாட்கழகம் என்ற அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் துணைத் தலைவர் டால்பின் தரன், ‘தி இந்து’விடம் கூறியதாவது:
மாமல்லபுரத்தில் தயாராகி வரும் 5 அடி உயர திருவள்ளுவர் கற்சிலையின் பணிகள் ஓரிரு நாளில் முடிந்துவிடும். இந்தச் சிலையை தருண் விஜயிடம் ஒப்படைக்கும் விழா வரும் 27-ம் தேதி சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மகாலில் நடைபெறவுள்ளது. நீதிபதி ராமசுப்பிரமணியன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இலக்கிய சொற்பொழிவாளர் பர்வீன் சுல்தானா, காசி மடத்தின் தலைவர் முத்துக்குமாரசாமி தம்பிரான், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்கின்றனர்.
சிலை திறப்பு விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோரை அழைக்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.