Published : 11 Jan 2020 08:14 AM
Last Updated : 11 Jan 2020 08:14 AM

எஸ்.ஐ. கொலைக்கு கண்டனம் தெரிவிக்காமல் திமுக கூட்டணி கட்சிகள் மவுனம்: பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம்

கன்னியாகுமரியில் காவல் உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் கூட தெரிவிக்காமல் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் மவுனம் சாதித்து வருவதற்கு பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த 8-ம் தேதி இரவு தமிழக – கேரள எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில், இரவுப் பணியில் இருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு கன்னியா
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தவுபிக், அப்துல் சமீம் ஆகியோர் காரணம் என்று கூறி அவர்களது படங்களை தமிழக காவல் துறை வெளியிட்டுள்ளது.

பணியில் இருந்த காவல் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் மற்றும் கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
யுள்ளது. இந்த சம்பவத்துக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி, எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா கட்சியின் மாநிலத் தலைவர் முகமது இஸ்மாயில், பெருந்தலைவர் மக்
கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், “காவல் அதிகாரி வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மணல் கொள்ளையர்கள்தான் காரணம்” என்று கூறியிருந்தார்.

ஆனால் பிரதான எதிர்க்கட்சியான திமுக, அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், உள்
ளிட்டவை கண்டனம் கூட தெரிவிக்காமல் மவுனம் சாதித்து வருகின்றன. இதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. சமூக ஊட
கங்களிலும் இது கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. இதுதொடர்பாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

களியக்காவிளையில் நடந்த கொடூரம் தனிப்பட்ட நபர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல. தமிழக காவல் துறையின் மீது
நடத்தப்பட்ட தாக்குதல். ஒன்றுமில்லாத பிரச்சினையை பெரிதாக்கி தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் திமுக, காங்கிரஸ்
உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகளும் போராட்டம் நடத்தின. அதன் தொடர்ச்சியாக இந்த படுகொலை நடந்துள்ளது. திமுகவுடன் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக போன்ற கட்சிகள் மட்டுமல்ல, பயங்கரவாதிகளும் கூட்டணியில் உள்ளனரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து காவல் துறையினர் விசாரிக்க வேண்டும். தமிழகத்தில் சிறு நிகழ்வு நடந்தாலும் சட்டப்பேரவையில் பெரிய
பிரச்சினையாக்கும் திமுக, காவல் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி மவுனம் சாதித்துள்ளது.

ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், காவல் துறை அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாத நிலை என்பதோடு இப்பிரச்சினையை கடந்து சென்றுள்ளார். கண்டனம் தெரிவிக்கக்கூட அவருக்கு மனம் வரவில்லை. வாக்கு வங்கி அரசியலுக்காக திமுக எந்த எல்லைக்கும் செல்லத் தயங்காது என்பதற்கு இது மிகச் சிறந்த உதாரணம். இதனை தமிழக மக்கள் புரிந்து கொள்வார்கள். திமுகவுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். காவல் அதிகாரி வில்சனை மணல் கொள்ளையர்கள் தான் சுட்டுக் கொன்றனர் என்று திசைதிருப்ப முயன்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம் காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x