Published : 11 Jan 2020 07:26 AM
Last Updated : 11 Jan 2020 07:26 AM

தமிழ்ப் பணியில் அசத்தும் வருமானவரித் துறை

இந்த ஆண்டுக்கான மேசைக் காலண்டர் வெளியிட்டு இருக்கிறது வருமானவரித் துறை தமிழ்நாடு & புதுச்சேரி பிரிவு. ‘ஆண்டுதோறும் நடைபெறும் ஒன்றுதானே..?' என இதனை அலட்சியப்படுத்தி விட முடியாது. காரணம், இம்முறை இதன் மையக் கருத்து தமிழ் இலக்கிய வரலாறு!

இந்த காலண்டரில் ‘செம்மொழி தமிழுக்கு அர்ப்பணம்' என்கிற தலைப்பில் ஆறு வரிகள் கொண்ட அறிமுகப் பத்தியில் கீழ்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

தொன்மையான சங்ககாலம் தொடங்கி இடைக்காலம் வழியே நவீன படைப்புகளின் வரிகளை எடுத்துக்காட்டுகிற இந்த ‘காலண்டர்' மாபெரும் மொழிக்கு எமது மிகச் சிறிய மரியாதை!

இதன் தொடர்ச்சியாக, இந்திய மொழி ஆராய்ச்சியாளர்களில் முதன்மையானவரான ஏ.கே.ராமானுஜம், தமிழ் மொழி பற்றி எழுதியதை 5 வரிகளில் நினைவுகூர்கிறது.

‘‘பழமை மற்றும் நடப்புத் தொடர்புகளில், தமிழ்ச் செய்யுள்களுக்கு இணையாக இந்திய மொழியில் வேறொன்று அதிகம் இல்லை (அரிது); விழுமியம், நிலைப்பாடுகளில் இவை, பண்பட்ட தொன்மையான செய்யுட் திரட்டு; இவையே, தமிழ் மொழியில் அறிவுத்திறனுக்கான மிகப்பழமையான சாட்சியம் ஆகா’’. (இப்பாடல்களை விடவும் தொன்மையானது தமிழரின் அறிவுத் திறம் என்றுகொள்க) தொடர்ந்து 12 மாதங் களுக்கும் தனித்தனியே 12 பாடல்கள் நன்கு தேர்ந்தெடுத்து தரப்பட்டுள்ளன.

‘‘வேரல்வேலி வேர்கோட் பலவின் சாரல் நாட!’’ (குறுந்தொகை), ‘‘யாதும் ஊரே... அதனினும் இலமே’’
(புறநானூறு) ‘‘உழுவார் உலகத்தார்க்கு ஆணி...’’ திருக்குறள் (1032), ‘‘தேரா மன்னா..’’ (சிலப்பதிகாரம்) ‘‘மெய்த் திருப்பதம் மேவு..’’ (கம்பராமாயணம்) ‘‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்..’’ (திருப்பாவை) ‘‘குனித்த புருவமும்,
கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்..’’ (திருநாவுக்கரசர் தேவாரம்) ‘‘பொருதடக்கை வாளெங்கே...’’ (கலிங்கத்துப் பரணி 484) ‘‘மெய் வருத்தம் பாரார்..’’ (நீதி நெறி விளக் கம்) ‘‘வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்..’’ (குற்றாலக் குறவஞ்சி) ‘‘தேடிச் சோறுநிதந் தின்று...’’ (பாரதியார்) ‘‘புதுமலர் அல்ல;...’’ (குடும்ப விளக்கு - பாரதிதாசன்) முகப்பு அட்டை முதல் நிறைவு வரையில் மொத்தம் 14 ஓவியங்கள் மிகுந்த கலை நேர்த்தியுடன் அழகு செய்கின்றன.

அர்ப்பணிப்பு உணர்வுடன் அழகாய் நெய்யப் பட்டு இருக்கிற காலண்டர் - தமிழ்நாடு வருமான வரித் துறையின், பல்வேறு தமிழ்ப் பணிகளின் நீட்சிதான்.

பொதுவெளியில் பொங்கல் வைத்தல், பண்டைய தமிழ்க் கலைகளை வெளிக் கொணர்தல், தமிழர் மரபுகளைப் போற்றுதல் என்று தமிழ்ப்பண்பாட்டு அடையாளங்களை மீட்டெடுக்கிற மிக நல்ல முயற்சி இது.தரமான தமிழ் நூல்கள் நிறைந்த நூலகம் மன
துக்கு மகிழ்வூட்டும் மற்றுமொரு நன்முயற்சி. தமிழ் தெரியாதவர்க்காக நடத்தப்படும் தமிழ்ப் பயிற்சி வகுப்பு, பெருத்த ஆதரவு பெற்று நல்ல விளைவை ஏற்படுத்தி வருகிறது.

நாள்தோறும் ஒரு திருக்குறள்- ஆங்கிலத்தில், தமிழில் பெயர்ப் பலகைகள் மற்றும் அறிவிப்புகள், உணவகம் முதல் விழா அரங்கம் வரைக்கும் அனைத்துக்கும் தூய தமிழ்ப் பெயர்கள்...இயன்றவரை எல்லா நிலைகளிலும் தமிழ் மொழிக்குத் தரும் முக்கியத்துவத்தில், தமிழ் நாடு வருமானவரித் துறை தனித்து நிற்கிறது.

ஒரே ஒரு கேள்வி - இந்த வழிமுறையை, எல்லாத் துறைகளுமே பின்பற்றலாமே...! ஏன் கூடாது...?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x