

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் ஆகிய 10,300 உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெறுகிறது.
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, சென்னை ஆகிய மாவட்டங்கள் தவிர்த்து இதர 27 மாவட்டங்களில் உள்ள 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5,090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகள், 9,624 கிராம ஊராட்சிமன்றத் தலைவர் பதவிகள், 76,746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் என மொத்தம் 91,975 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.
இதில் 91,907 பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் மட்டும் அறிவிக்கப்பட்டன. 40 பதவிகளுக்கு யாரும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யாததால் அங்கு தேர்தல் நடைபெறவில்லை. பல்வேறு காரணங்களால் 28 பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்திவைக்கப்பட்டது. வெற்றிபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் கடந்த 6-ம் தேதி பதவியேற்றுக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து 27 மாவட்டங்களில் உள்ள 27 மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகள், 314 ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகள், 9,618 கிராம ஊராட்சி துணைத் தலைவர் பதவிகள் என மொத்தம் 10,300 உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் அந்த உள்ளாட்சி அலுவலகங்களில் இன்று நடைபெறுகிறது.
இதில், மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் வெற்றிபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள், அவர்களில் ஒருவரை தலை
வராகவும் ஒருவரை துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்க உள்ளனர். இந்த மறைமுகத் தேர்தலுக்காக மாவட்ட ஊராட்சி அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், கிராம ஊராட்சி மன்ற அலுவலகங்களில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் ஏற்பாடுகள் செய்துள்ளன. மேலும் உயர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியின்படி, மறைமுகத் தேர்தல் முழுவதும் ஆடியோ இல்லாத வீடியோவாக பதிவு செய்யவும் மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளின் விவரங்கள் இன்று மாலை வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.