Last Updated : 10 Jan, 2020 07:28 PM

 

Published : 10 Jan 2020 07:28 PM
Last Updated : 10 Jan 2020 07:28 PM

குரூப் 4 தேர்வு முறைகேடு புகார்: ராமநாதபுரத்தில் டிஎன்பிஎஸ்சி செயலாளர் விசாரணை

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு குற்றச்சாட்டைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட தேர்வு மையங்களில் டிஎன்பிஎஸ்சி செயலாளர் தலைமையிலான அதிகாரிகள் இன்று விசாரணை மேற்கொண்டனர்.

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட தொகுதி-4 பிரிவில் காலியாக உள்ள 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) கடந்தாண்டு செப்டரில் தேர்வு நடத்தியது. இதில் தமிழகம் முழுவதும் 5,575 தேர்வு மையங்களிலிந்து 16,29,865 பேர் தேர்வு எழுதினர். இத்தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் 12-ம் தேதி வெளியிடப்பட்டது. அதனையடுத்து தேர்வு எழுதியவர்களின் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டன.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, ராமேசுவரம் தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களில் மாநில அளவில் முதல் 100 இடங்களைப் பிடித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதனையடுத்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் கே.நந்தகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 128 தேர்வு மையங்கள் மூலம் 32,879 பேர் தேர்வு எழுதினர். இதில் 497 பேர் தேர்வாகி சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதில் கீழக்கரை கவுசானல் கலை அறிவியல் கல்லூரி, புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் 3 மையங்கள், ராமேசுவரத்தில் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீ பர்வதவர்த்தி அம்மன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தங்கச்சிடம் உதயம் பாலிடெக்னிக் கல்லூரி, ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் இருந்து 2,840 பேர் தேர்வு எழுதியுள்ளனர்.

இவர்களில் 262 பேர் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மொத்தம் ராமநாதபுரம் மாவட்ட தேர்வு மையங்களில் இருந்து 57 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதில் 40 பேர் ராமேசுவரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதிய வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். தேர்வான 57 பேரும் ஒரே தேர்வறையிலோ அல்லது ஒரே தேர்வு மையத்திலிருந்தோ தேர்வு செய்யப்படவில்லை.

இத்தேர்வு மையங்களில் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களில முதல் 1000 இடங்களில் 40 பேரும், முதல் 100 இடங்களில் 35 பேரும் உள்ளனர். இக்குற்றச்சாட்டைத் தொடர்ந்து இவ்விரு தேர்வு மையங்களிலும் தேர்வான விண்ணப்பதாரர்களின் விடைத்தாள் மற்றும் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இதில் தவறு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். விசாரணை செய்யப்பட்டு உண்மை நிலை அறிவிக்கப்படும். அதனால் தேர்வர்கள் தேர்வாணையத்தின் மீது நம்பிக்கை கொண்டு அமைதி காக்க வேண்டும் என கடந்த 6ம்- தேதி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி செயலாளர் கே.நந்தகுமார் தலைமையில் டிஎன்பிஎஸ்சி சார்பு செயலாளர் ஒருவர் உள்ளிட்டோர் இன்று குற்றச்சாட்டுக்கு உள்ளான தேர்வு மையங்களான கீழக்கரை வட்டம் முத்துப்பேட்டை கவுசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றை ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட கருவூலத்தில் தொகுதி-4 வினாத்தாள் மற்றும் விடைத்தாள் பாதுகாத்து வைக்கப்பட்ட கருவூல காப்பறை ஆகியவற்றில் ஆய்வு செய்து, அங்குள்ள அதிகாரிகளிடம் விசாரணை செய்தனர். தொடர்ந்து குற்றச்சாட்டுக்கு உள்ளான ராமேசுவரம் மையங்களிலும் ஆய்வு செய்ய உள்ளனர். இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் கே.நந்தகுமாரிடம் கேட்டபோது, விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதால் தற்போது எதுவும் தெரிவிக்க முடியாது எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x