

சாலையோரங்களில், குப்பைத் தொட்டிகளில், வன விலங்குகள் நடமாடும் பகுதிகளில், முட்புதர்களில் குழந்தைகளை வீசிச் செல்லாமல், தயவுசெய்து தொட்டிலில் போட்டுவிட்டுச் செல்லுங்கள் என்றார் நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா.
நீலகிரி மாவட்டம் உதகை மஞ்சனக்கொரை கிராமம் அருகில் உள்ள வனத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, பிறந்து தொப்புள் கொடி கூட காயாத பச்சிளம் ஆண் குழந்தையை வீசிச் சென்றனர். சிறுத்தை, கரடி உட்பட வன விலங்குகள் உலாவும் காட்டில், மாலை நேரத்தில் குழந்தையின் அழுகுரலைக் கேட்ட இரண்டு பெண்கள், பத்திரமாக அதை மீட்டு, மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.
இதேபோல், உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகில் உள்ள வனத்தில், பிறந்து ஒருநாளே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை அதிகாலை வாட்டும் குளிரில் வீசிச்சென்னர். இந்தக் குழந்தையையும் மீட்டு, மாவட்ட நிர்வாகம் பிரனேஷ் என்று பெயரிட்டு பராமரித்து வந்தது. இந்நிலையில், குழந்தை பிரனேஷை திருவண்ணாமலையைச் சேர்ந்த காப்பகத்திடம் ஒப்படைத்தனர்.
மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, குழந்தை பிரனேஷை பிரிய மனமில்லாமல், கொஞ்சியபடியே காப்பக நிர்வாகியிடம் ஒப்படைத்தார். 'குழந்தையை பத்திரமா பார்த்துக்கோங்க' என அவர் கூறும்போது, அவரது தாய்மை மேலோங்கிக் காணப்பட்டது.
மேலும் அவர் கூறும் போது, "உதகையில் மஞ்சணக்கொரை பகுதியில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை இனியன் திருப்பூர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டான். தற்போது பிரனேஷ் திருவண்ணாமலை குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டான்.
துரதிர்ஷ்டவசமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கோத்தகிரியில் ஆண் குழந்தை கொன்று புதைக்கப்பட்டது. அந்தக் குழந்தை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால், சிறப்பாகப் பராமரித்து குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்திருக்கலாம்.
காப்பகங்களில் ஒப்படைக்கப்படும் குழந்தைகள், மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி முறையாக குழந்தை தேவையானோருக்கு தத்துக் கொடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில், பச்சிளம் குழந்தைகளைச் சாலையோரங்களிலும் வனவிலங்குகள் நடமாடும் பகுதிகளிலும் வீசுவதால், குழந்தைகளுக்கு ஆபத்து நேர்கிறது.
இதைத் தடுக்கும் வகையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் சார்பில், உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா சாலையில் தொட்டில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொட்டில் அமைக்கப்பட்டுள்ள பகுதிளில் கண்காணிப்பு கேமராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை.
குழந்தையை வளர்க்க இயலாத நிலையில் உள்ள பெற்றோர்கள், தயவுசெய்து குழந்தைகளைச் சாலையோரங்களில், குப்பைத் தொட்டிகளில், வன விலங்குகள் நடமாடும் பகுதிகள் மற்றும் முட்புதர்களில் வீசிச் செல்லாமல், இந்தத் தொட்டிலில் போட்டு விட்டுச் செல்லலாம்" என்றார்.
மாவட்டக் குழந்தைகள் நலக் குழும உறுப்பினர் எம்.கண்ணன் கூறும் போது, "இந்தத் தொட்டிலில் அலுவலக முகவரி மற்றும் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்களும் அச்சிடப்பட்டுள்ளன. எனவே, குழந்தையை விட்டுச் சென்றதும், தொட்டிலில் காணப்படும் தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களைப் பற்றிய தகவல்கள் வெளியிடப்படமாட்டாது. ரகசியம் காக்கப்படும். குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு, பராமரிப்பும் பாதுகாப்பும் வழங்கப்படும்" என்றார்.