

கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவே நடத்தலாம் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த கல்யாண சுந்தரம் உட்பட பலர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு ஒவ்வொரு ஆண்டும் விழாக்குழு அமைக்கப்படும்.
இந்த குழுவின் தலைவராக இருப்பவர், கடந்த 10 ஆண்டுகளாக தலைவராக உள்ளார். அவர் ஜல்லிக்கட்டை தன் குடும்ப விழா போல் நடத்துகிறார்.
ஜல்லிக்கட்டு குழுவில் ஆதிதிராவிட சமூகத்தினருக்கு வாய்ப்பு அளிப்பதில்லை. எனவே அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு அனைத்து சமூகத்தை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கும் வகையில் விழாக்குழு அமைத்து ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி துரைசாமி, ரவீந்திரன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
பின்னர், அவனியாபுரம் ஜல்லிக்கட்டை கடந்த ஆண்டை போல் இந்தாண்டும் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து நடத்தலாம். இது தொடர்பாக ஜன. 13-ல் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.