Last Updated : 10 Jan, 2020 02:07 PM

 

Published : 10 Jan 2020 02:07 PM
Last Updated : 10 Jan 2020 02:07 PM

மக்கள் விரோதிகளுக்குத் தான் பாதுகாப்பு அவசியம் எங்களுக்கு அல்ல: ஸ்டாலினுக்கு 'இசட்' பாதுகாப்பு ரத்தானது குறித்து கனிமொழி கருத்து

தூத்துக்குடி

"திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த இசட் பிரிவு பாதுகாப்பு அவரை அச்சுறுத்துவதற்காக ரத்து செய்யப்பட்டுள்ளது. அவருக்கு மக்கள் பாதுகாப்பு இருக்கும்போது வேறு எதுவும் தேவையில்லை.." என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

திமுக மகளிர் அணி செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான கனிமொழி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 3 நாள் சுற்றுப்பயணமாக இன்று (வெள்ளிக்கிழமை) தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளிக்கையில், "குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எந்த அளவுக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு இருக்கிறது என்று தெரிந்த பிறகும் தமிழகத்தில் உள்ள அதிமுக அரசாங்கம் மசோதாவை ஆதரித்து வாக்களித்துள்ளது.

இது இங்கு இருக்கக்கூடிய சிறுபான்மை மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் செய்யும் துரோகம். மாநிலங்களவையில் இந்த சட்டத்தை எதிர்த்து அதிமுக வாக்களித்திருந்தால் மத்திய அரசால் இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றியிருக்க முடியாது.

தொடர்ந்து, இந்த சட்டத்தை எதிர்த்துப் போராடியவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிற சூழலை உருவாக்கியதற்கு காரணமாக அதிமுகவினர் இருக்கிறார்கள்.

சென்னையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இணைந்து நடத்திய பேரணியில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த இசட் பிரிவு பாதுகாப்பு அவரை அச்சுறுத்துவதற்காக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் கண்துடைப்புக்காக துணை முதல்வருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மக்களே பாதுகாப்பு அரணாக இருக்கும் போது மற்ற எந்த பாதுகாப்பும் தேவையில்லை.

ஆட்சியில் உள்ளவர்கள் தான் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே அவர்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு தான் பாதுகாப்பு தேவை" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x