Published : 10 Jan 2020 01:13 PM
Last Updated : 10 Jan 2020 01:13 PM

பல்கலைக்கழகங்களையும், மாணவர்களையும் பாதுகாக்க சிஆர்பிஎஃப் வீரர்களைப் பயன்படுத்துங்கள்: நன்றி தெரிவித்த ஸ்டாலின்

தனக்குப் பல ஆண்டுகளாக பாதுகாப்பு வழங்கிய சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். மதத்தின் பெயரால் வன்முறை நிகழ்த்தும் நபர்களிடமிருந்து பாதுகாக்க சிஆர்பிஎஃப் வீரர்களை மத்திய அரசு பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தில் அதிமுக்கிய பாதுகாப்பான இசட் பிளஸ் கருப்புப் பூனைப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த ஜெயலலிதா, கருணாநிதி இருவரும் மறைந்துவிட்டனர். அவர்கள் மறையும் வரை அந்தப் பாதுகாப்பை அரசு விலக்கவில்லை.

இதற்கு அடுத்தபடியாக, விஐபி பாதுகாப்பான இசட் பிரிவு சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்பு நீண்ட ஆண்டுகளாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு வழங்கப்படுகிறது. பின்னர் அது ஸ்டாலினுக்கும் வழங்கப்பட்டது. பின்னர் 2017-ம் ஆண்டு ஓபிஎஸ்ஸுக்கும் வழங்கப்பட்டது.

மத்திய அரசோடு ஓபிஎஸ் இணக்கமாக இருக்கும் சூழலிலும் ஓபிஎஸ்ஸுக்கும், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்டு வந்த இசட் பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு இன்று முதல் விலக்கிக் கொண்டது. இதை திமுக தலைவர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கண்டித்துள்ளனர்.

அந்தமானுக்கு கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்குச் சென்ற ஸ்டாலினுக்கு இந்தத் தகவல் இன்று கிடைத்தது. அவருடன் இருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்பை விலக்கிக்கொண்டனர்.

இதுகுறித்து ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவின் தமிழாக்கம்:

“கடந்த பல ஆண்டுகளாக எனக்குப் பாதுகாப்பு வழங்கிய சிஆர்பிஎஃப் வீரர்கள் @crpfindia ஒவ்வொருவருக்கும் நான் முழு மனதுடன் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மதத்தின் பெயரில் வன்முறையில் ஈடுபடுவோரிடமிருந்து பல்கலைக்கழகங்களையும் மாணவர்களையும் பாதுகாக்க சிஆர்பிஎஃப் வீரர்களைப் பயன்படுத்துமாறு மத்திய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன்”.

இவ்வாறு தனது பதிவில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x