

தமிழகத்தில் என்ஆர்சி, என்பிஆரை அமல்படுத்தக் கூடாது என, முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா நேரில் வலியுறுத்தியுள்ளார்.
இன்று (ஜன.10) சென்னையில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்தனர்.
அதன் பின்னர், ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் பேசியதாவது:
"என்ஆர்சி எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தக் கூடாது என்ற கோரிக்கையை முதல்வரிடம் முன்வைத்தோம். அதனை அரசு அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினோம். வரும் ஏப்.20 முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ள தேசிய மக்கள்தொகை பதிவேட்டை நடத்தக்கூடாது. மக்கள்தொகை சட்டம் 1948-ன் அடிப்படையில் தான் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம்.
என்ஆர்சியின் முதல் படிதான் என்பிஆர் என்பதற்கான ஆதாரங்களை முதல்வரிடம் சமர்ப்பித்திருக்கிறோம். அதற்காக, உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் பேசியவை, மத்திய அரசின் அரசாணை உள்ளிட்டவற்றை சமர்ப்பித்துள்ளோம். என்.பி.ஆர். 2010-ல் 15 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இப்போது 6 கேள்விகள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு குறிப்பிட்ட நபரின் பெற்றோர் எப்போது, எங்கே பிறந்தார்கள் என்ற கேள்வி கேட்கப்படுகிறது. இவற்றை ஆவணங்களாகச் சமர்ப்பித்திருக்கிறோம். இந்த ஆவணங்கள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுத்திருப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
என்ஆர்சி, என்பிஆர், குடியுரிமைத் திருத்தச் சட்டம் மூன்றையும் இணைத்துதான் பார்க்க வேண்டும். இது முஸ்லிம்கள், ஈழத் தமிழர்களின் பிரச்சினை அல்ல. தமிழர்களின் குடியுரிமையைப் பறிக்கக்கூடிய திட்டம். பெற்றோர்களின் பிறந்த தேதி, இடம் குறித்த தகவல்களை முதல்வரே கூட அளிக்க வேண்டிய சூழல் ஏற்படும். மக்களின் சார்பில் கோரிக்கையை வைத்திருக்கிறோம். நடவடிக்கை எடுப்பார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்".
இவ்வாறு ஜவாஹிருல்லா தெரிவித்தார்.