

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி வழக்கிலிருந்து அவர் சார்பில் ஆஜராகி வந்த வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளார் பேராசிரியை நிர்மலாதேவி.
நிர்மலாதேவி சார்பில் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் ஆஜராகி வந்தார். இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தான் வழக்கிலிருந்து விலகுவதற்கான காரணத்தைத் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
"நிர்மலாதேவி வழக்கில் ஆஜராவதிலிருந்து இன்று முதல் நான் விலகிக் கொள்கிறேன். இந்த வழக்கில் ஏற்கெனவே தீர்ப்பு எழுதப்பட்டுவிட்டது. தீர்ப்பை எழுதிவிட்டு வழக்கை நடத்துகிறார்கள். இதனால் எனக்கு இந்த நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லை.
நிர்மலாதேவிக்கு குடும்பத்தினரும் ஒத்துழைக்கவில்லை, வழக்கிலிருந்து விடுபடவேண்டும் என்றும் அவரும் சுயமாக நினைக்கவில்லை. தன்னை அமைச்சர்கள் மிரட்டுவதாகக் கூறுகிறார். யாரோ சிலர் ஆட்டி வைப்பதற்கு இவர் ஆடுகிறார். நூலில்லா பம்பரம் போல் ஆடிக்கொண்டிருக்கிறார். சில உண்மைகளை நான் சொன்னால் தனிப்பட்ட முறையிலும் வழக்கிலும் பாதிப்பு ஏற்படும்.
ஆனால், சில உண்மைகளை நான் நாட்டின் நலன் கருதி சொல்ல விரும்புகிறேன். இந்த வழக்கில் நேரடியாக முக்கியப் பிரமுகர்கள் சிலர் சம்பந்தப்பட்டிருப்பது உண்மை. ஆனால் அதை மறைத்து நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகிய மூவரை மட்டுமே சிக்கவைக்க நினைக்கின்றனர்.
நிர்மலாதேவி மீது மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் குற்றச்சாட்டு இருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டு போலியானது என்று நிரூபிக்க அவரே அஞ்சுகிறார். இந்த வழக்கு தமிழகத்தில் நடக்கும் வரை நீதி கிடைக்காது. இந்த ஆட்சி இருக்கும்வரை இந்த வழக்கில் நியாயம் கிடைக்காது. இதற்கு நான் உடன்பட விரும்பவில்லை. அதனால் நான் விலகுகிறேன். இன்று வேண்டுமானால் உண்மைக் குற்றவாளிகள் தப்பிக்கலாம். ஆனால், ஆட்சி மாறினால் உண்மைகளி வெளிவரும்".
இவ்வாறு வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தெரிவித்தார்.