

ஜல்லிக்கட்டில் வெல்லும் மாடுபிடி வீரர்களுக்கு விளம்பரதாரர்கள் வழங்கும் பரிசுப் பொருட்களை தனிநபர்களிடம் வழங்காமல் ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியரிடமே வழங்க வேண்டும் என்று மதுரை ஆட்சியர் டி.ஜி.வினய் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பாக எந்தவொரு தனிநபர் மற்றும் விழாக்குழுவினரிடமோ நன்கொடை மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்க தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், ஜல்லிக்கட்டு தொடர்பாக நன்கொடை செலுத்த விரும்புபவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர், மதுரை என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் காசோலையாகவோ அல்லது வரைவோலையாகவோ வழங்கலாம்.
பரிசுப்பொருட்கள் அளிக்க விரும்புவர்கள் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு அலுவல் குழுத்தலைவரான வருவாய் கோட்டாட்சியரிடம் (மேலூர்) சமர்ப்பிக்கலாம்.
மேலும் இது தொடர்பாக புகார் தெரிவிக்க விரும்புபவர்கள் 9443829511, 0452 2546108 என்ற எண்களில் அலுவலக நேரங்களில் புகார் தெரிவிக்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு விழாக் குழுவில் அனைத்து சமுதாயத்தினரையும் சேர்க்க வேண்டும், ஜல்லிக்கட்டுக்காக தனிநபர் வசூல் செய்வதை தடுக்க வேண்டும் என அவனியாபுரத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மாவட்ட ஆட்சியர் வினய் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தடுப்பு வேலி அமைக்கும் பணி தொடக்கம்:
மதுரையில் தை முதல் நாளன்றும் அவனியாபுரத்திலும், இரண்டாம் நாளில் பாலமேட்டிலும், மூன்றாம் நாளில் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு விழா நடைபெறும்.
அதுவும் திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரத்தில் தை முதல் நாளன்று ஜல்லிக்கட்டைத் தொடங்குவதே மரபாகும். இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் முதற்கட்டமாக அவனியாபுரத்தில் பாதுகாப்பு வேலிகள் அமைத்து ஐல்லிக்கட்டு விழா பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.'
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பாக இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.