Published : 10 Jan 2020 10:50 AM
Last Updated : 10 Jan 2020 10:50 AM

குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் எஸ்.ஐ.யை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள் அடையாளம் தெரிந்தது

எல்.மோகன் / அ.அருள்தாசன்

களியக்காவிளை சோதனைச்சாவடி யில் நேற்று முன்தினம் இரவு காரை சோதனையிட முயன்ற காவல் சிறப்பு எஸ்.ஐ. துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொடூரச் செயலை செய்துவிட்டு காரில் இருந்து தப்பி ஓடிய குமரியைச் சேர்ந்த 2 இளைஞர்களின் படம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அவர்கள் இருவரும் ஏற்கெனவே போலீஸாரால் தேடப்பட்டு வந்த பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த அப்துல் ஷமீம் (29), தவுபீக் (25) என்பது தெரியவந்துள்ளது. அவர்களை பிடிக்க தமிழகம் மற்றும் கேரளாவில் தனிப்படை போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பருத்திவிளையைச் சேர்ந்தவர் வில்சன் (58). தமிழக காவல்துறையில் சிறப்பு எஸ்.ஐ.யாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு களியக்காவிளை இஞ்சிவிளை குறுக்கு சாலையில் உள்ள சோதனைச் சாவடியில் வில்சன் பணியில் இருந்தார். சக போலீஸார் சிறிது தூரத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இரவு 10 மணியளவில் கேரளாவில் இருந்து வேகமாக வந்த கார் ஒன்று சோதனைச் சாவடியை கடந்து செல்ல முயன்றது.

இதைப் பார்த்த வில்சன் அந்த காரை தடுத்து நிறுத்த முயன்றுள்ளார். சோதனைச் சாவடியை கடந்து சிறிது தூரம் சென்றதும், காரை நிறுத்திவிட்டு அதில் இருந்து இறங்கிய குல்லா அணிந்த 2 இளைஞர்கள். வில்சனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது திடீரென அவர்களில் ஒருவர் துப்பாக்கியை எடுத்து வில்சனை தொடர்ச்சியாக 3 முறை சுட்டுள்ளார். வில்சனின் மார்பு மற்றும் தொடையில் 3 குண்டுகள் பாய்ந்ததால் பலத்த காயமடைந்த அவர் மயங்கி கீழே விழுந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காருடன் 2 இளைஞர்களும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த சக போலீஸார் ரத்தம் கொட்டிய நிலையில் மயங்கிக் கிடந்த வில்சனை அங்குள்ள மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். எனி னும், அவர் வழியிலேயே உயிரிழந்தார். போலீஸ் ஒருவரே சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டிஜிபி விசாரணை

இத்தகவல் அறிந்ததும் குமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வட நேரே, எஸ்.பி. நாத் ஆகியோர் முதலில் அங்கு சென்று விசாரணை நடத்தினர். தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முக ராஜேஷ்வரன் சம்பவ இடத்தை பார்வையிட்டார்.

தமிழக டிஜிபி திரிபாதி நேற்று களியக்காவிளை சோதனைச் சாவடிக்கு வந்து ஆய்வு செய்தார். அங்கு நடந்த சம்பவம் குறித்து சக போலீஸாரிடம் கேட்டறிந்தார். சம்பவம் நடந்த சோதனைச்சாவடி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை அவரும், போலீஸ் அதிகாரிகளும் ஆய்வு செய்தனர்.

சிறப்பு எஸ்.ஐ. வில்சனை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த பின்னர் காரில் இருந்து இறங்கிய குல்லா அணிந்த 2 இளைஞர்கள் அருகில் உள்ள பள்ளிவாசல் வழியாக ஓடிச் சென்று, காரில் ஏறி தப்பி மீண்டும் கேரளா வழித்தடத்தில் செல்வது பதிவாகி இருந்தது. அவர்கள், இருவரும் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டையைச் சேர்ந்த அப்துல் ஷமீம்(29), நாகர் கோவில் இளங்கடையைச் சேர்ந்த தவுபீக்(25) என்பதும் ஏற்கெனவே, அவர்கள், பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பிருப்பதாக போலீஸாரால் தேடப்படும் நபர்கள் என்பதும் தெரிய வந்தது.

இதுகுறித்து போலீஸார் கூறும் போது, ‘‘களியக்காவிளை சோதனைச்சாவடிக்கு அருகிலேயே ஒரு பள்ளிவாசலின் பின்பக்க வாசல் உள்ளது. முன்பகுதி வழியாக சென்றால் திருவனந்தபுரம் செல்லும் சாலையை அடைந்துவிடலாம்.

காரை சோதனையிட முயன்றபோது, வில்சனுடன் தகராறு செய்து அவரை துப்பாக்கியால் சுட்ட 2 இளைஞர்களும் பள்ளிவாசலின் பின்பக்க வாசல் வழியாக ஓடி, முன் வாசல் வழியாக மீண் டும் கார் நிற்கும் இடத்தை அடைந்து, அதில் ஏறி கேரளாவுக்கு தப்பிச் சென்றுள்ளனர்’’ என தெரிவித்தனர்.

அப்துல் ஷமீம், தவுபீக் இருவரையும் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கேரள போலீஸ் தரப்பிலும் தனிப்படை அமைத்து அம்மாநில போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

போதை கடத்தலை தடுத்ததால் திட்டமிட்டு வில்சன் கொலையா?

சுட்டு கொல்லப்பட்ட எஸ்.ஐ. வில்சன் சோதனைச்சாவடியில் மிகவும் கண்டிப்புடன் நடந்து வந்ததாகவும், இதனால் திட்டமிட்டே அவரை கொலை செய்திருக்கலாம் எனவும் போலீஸார் சந்தேகிக்கின்றனர். களியக்காவிளை சோதனைச்சாவடியில் வில்சன் பணியில் இருக்கும் நேரத்தில் அவ்வழியாக கல், மணல் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங் கள் மற்றும் கஞ்சா, போதைப் பாக்கு உள்ளிட்டவற்றை கேரளாவுக்கு கடத்தி செல்லும் வாகனங்களை பிடிப்பதுடன், சிபாரிசுக்கு இடமளிக்கா மல் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து கடும் நடவடிக்கை எடுத்து வந்தார். சமீப காலமாக களியக்காவிளை சோதனைச்சாவடியில் அதிக அளவில் போதை பொருட்கள் பிடிபட்டன. வில்சன் காட்டிய கெடுபிடி களே இதற்கு காரணம். இதனால் ஆத்திரமடைந்த கடத்தல்காரர்கள் இக்கொலைக்கு தூண்டுதலாக செயல் பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதற்கு முன்பு போதை பொருட்களுடன் கைதான குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மற்றும் கேரள குற்றவாளிகளை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லையில் இளைஞர் வீட்டில் சோதனை

தமிழக- கேரள எல்லையில் சோதனைச்சாவடியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (58) சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து தனிப்படை போலீஸார் திருநெல்வேலி பேட்டையிலுள்ள சீட் கவர் தயாரிப்பவர் வீட்டில் நேற்று சோதனை நடத்தினர்.

வில்சன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து சோதனைச் சாவடிகளிலும் இரவோடு இரவாக போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். திருநெல்வேலி மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணன் தலைமையிலான போலீஸார் கேடிசி நகர் நான்கு வழிச்சாலை, பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரம் சாலை, டக்கரம்மாள்புரம் நாகர்கோவில் சாலை, தாழையூத்து மதுரை சாலை, பேட்டை தென்காசி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சோதனை சாவடிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

நேற்று அதிகாலையில் களியக்காவிளையிலிருந்து வந்த தனிப்படை போலீஸார், திருநெல்வேலி பேட்டையில் உள்ள ரகுமான்பேட்டை 4-வது வடக்கு தெருவிலுள்ள சாகுல்ஹமீது (69) என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர். இவரது மகன் அல்கபீர் (28) டவுன் வழுக்கோடை பகுதியில் வாகனங்களுக்கு சீட் கவர் வடிவமைக்கும் கடை நடத்தி வருகிறார். தனிப்படை போலீஸார் சோதனையிட்டபோது அல்கபீர் வீட்டில் இல்லை. அவர் எங்கு சென்றார் என்பது குறித்து தனிப்படை போலீஸார் வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய சோதனை காலை 6.30 மணி வரை நீடித்தது. அல்கபீரின் படிப்புச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை தனிப்படையினர் ஆய்வு செய்தனர்.

மே மாதத்துடன் ஓய்வுபெற இருந்தார்

சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. வில்சனுக்கு ஏஞ்சல் மேரி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. 2-வது மகள் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். அவர் குழித்துறையில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் படித்து வந்தார்.

வில்சன் 2 மாதங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவ விடுப்பு முடிந்து கடந்த 1-ம் தேதி முதல் களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியமர்த்தப்பட்டார். மே மாதம் பணி ஓய்வு பெற இருந்த நிலையில், தனது சொந்த ஊரான மார்த்தாண்டம் பருத்திவிளைக்கு அருகேயுள்ள சோதனைச்சாவடியில் பணியை நிறைவு செய்ய விரும்பினார். இந்நிலையில் அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அவரது குடும்பத்தினர், போலீஸார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் பதிவெண் கொண்ட கார்

களியக்காவிளையில் சிறப்பு எஸ்.ஐ.யை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகளைத் தேடி கேரளம் முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தப்பிச்சென்றுள்ள கார் திண்டுக்கல்லில் பதிவு செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

வில்சனை சுட்டுக்கொன்றதாக அடையாளம் காணப்பட்டுள்ள நாகர்கோவிலைச் சேர்ந்த அப்துல் ஷமீம், தவுபீக் ஆகிய இருவரும் கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள். ஜாமீனில் வெளியே வந்து, மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருக்கும் இவர்களை கியூ பிரிவு போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், கேரளாவில் இருந்து நாகர்கோவில் நோக்கி காரில் வந்த இவர்கள் இருவரும், எஸ்.ஐ.யைக் கொலை செய்தபிறகு, தாங்கள் வந்த டிஎன் 57 ஏ.டபிள்யு. 1559 என்ற திண்டுக்கல் பதி வெண் கொண்ட கருப்பு நிற காரிலேயே மீண்டும் ஏறி, கேரளாவுக்கே தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து, கேரள மாநிலம் முழுவதும் போலீஸார் உஷார்படுத் தப்பட்டுள்ளனர். இந்த கார் சம்பந்தமான தகவல்களை 94979 80953 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கோ, 0471 22712500, 94979 00999 என்ற கேரள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கோ தெரிவிக்கலாம்.

தீவிரவாதிகளுடன் காரில் மேலும் 4 பேர்

கேரள போலீஸ் டிஜிபி லோகநாத் பெகெரா கூறும்போது, ``எஸ்ஐ கொலையில் தொடர்புடையவர்கள் கேரளாவுக்கு தப்பி வந்த காரில், மேலும் 4 பேர் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இக்கார் சம்பந்தமான தகவல் தெரிவிப்போருக்கு உரிய சன்மானம் வழங்கப்படும். தகவல் தெரிவிப்போர் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்” என அறிவித்துள்ளார். இதனிடையே, தமிழக டிஜிபி திரிபாதி நேற்று மாலை திருவனந்தபுரம் வந்தார். கேரள டிஜிபியுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.

இதன்தொடர்ச்சியாக, திருவனந்தபுரம் அருகே பூந்துறையில் உள்ள ஒரு வீட்டில் கேரள போலீஸார் சோதனை நடத்தினர். அந்த வீட்டைச் சேர்ந்த ஒருவர் முன்பு நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது

கேரள போலீஸும் தேடுகிறது

களியக்காவிளை சோதனைச்சாவடியில் இரவு பணியில் இருந்த எஸ்.ஐ. வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், குமரி மாவட்டத்தை சேர்ந்த அப்துல் ஷமீம், தவுபீக் ஆகி யோருக்கு தொடர்பிருப்பதாக அடையாளம் காணப் பட்டுள்ளது. தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவின் பேரில் அவர்களைப் பிடிக்க கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையுள்ள சோதனைச்சாவடிகளில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான குமரி கடலோர பகுதிகளிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது. குமரி மாவட்டத்தில் மட்டும் 5 தனிப்படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். கியூ பிரிவு போலீஸார் மற்றும் மேலும் இரு தனிப்பிரிவு போலீஸார் கேரளா விரைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x