

திருவள்ளூர் மாவட்டத்தில் இளம்பெண்ணை மீட்கும் முயற்சியில் உயிரிழந்த இளைஞர் யாகேஷ் மற்றும் அவரது நண்பர்களுக்கு இழப்பீடு வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார் முதல்வர் பழனிசாமி.
யாகேஷ் செய்த தியாகம் என்ன?
திருவள்ளூர் பிஞ்சிவாக்கத்தைச் சேர்ந்தவர் கேசவன் (32). கடந்த டிசம்பர் 26-ம் தேதி கேசவன், மப்பேடு எனும் பகுதியிலிருந்து செம்பரம்பாக்கம் நரசிங்கபுரத்துக்கு இளம்பெண் ஒருவரை ஏற்றிச் சென்றுள்ளார். அந்தப் பெண்ணின் மீது கேசவனுக்கும் அவரது நண்பர்களுக்கும் ஒரு கண் இருந்து வந்தது.
அன்று ஆட்டோவில் ஏறிய பெண்ணை வழக்கமான வழியில் அழைத்துச் செல்லாமல் வேறு வழியில் சென்றார். அந்தப் பெண் கேட்டபோது மிரட்ட, பயத்தால் தன்னைக் காப்பாற்றும்படி அந்தப் பெண் அலறினார். கடம்பத்தூர் அருகே சாலையோரம் நின்று பேசிக் கொண்டிருந்த யாகேஷ், எஸ்தர் பிரேம்குமார், வினித், துரைராஜ் மற்றும் பிராங்க்ளின் ஆகிய 5 இளைஞர்கள் ஷேர் ஆட்டோவிலிருந்த பெண்ணின் அபயக் குரலைக் கேட்டனர்.
உடனடியாக தங்கள் மோட்டார் சைக்கிளில் ஆட்டோவைத் துரத்தினர். யாகேஷ் தனது நண்பர்களோடு அந்த ஷேர் ஆட்டோவைப் பிடிக்க முயன்றார். ஆட்டோவிலிருந்து அந்தப் பெண் குதித்துவிட, அவரை 3 இளைஞர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். யாகேஷும், பிராங்க்ளினும் ஆட்டோ டிரைவரைப் பிடிக்க தங்கள் மோட்டார் சைக்கிளில் துரத்தினர்.
அவர்களுக்குப் போக்குக் காட்டி ஆட்டோ ஓட்டுநர் கேசவன் ஷேர் ஆட்டோவை ஓட்டினார். ஆட்டோவை முந்திச் செல்ல முயன்ற பிராங்க்ளினை இடித்துத் தள்ள, அவர் கீழே விழுந்து காயமடைந்தார். விடாமல் துரத்திச் சென்ற யாகேஷ் ஒரு கட்டத்தில் ஆட்டோவை முந்திப் போய் ஆட்டோவை நிறுத்துமாறு கூறினார். ஆனால் அந்த ஆட்டோ ஓட்டுநர் ஆட்டோவை நிறுத்தாமல் யாகேஷ் மீது மோதிவிட்டுத் தப்பினார்.
ஆட்டோ மோதியதில் படுகாயமடைந்த யாகேஷை சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 3 நாள் சிகிச்சைக்குப் பின் யாகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். சாலையில் கடத்தப்பட்ட ஒரு பெண்ணின் மானத்தைக் காக்க தீரத்துடன் போராடி, பெண்ணை மீட்டு குற்றவாளியையும் பிடிக்க வேண்டும் என்று துரத்திச் சென்ற யாகேஷ் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
திருவள்ளூர் மாவட்டம், கொண்டஞ்செரி கிராமத்தைச் சேர்ந்த யாகேஷ் தனியார் நிறுவனம் ஒன்றில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவரது தியாகத்தைப் பாராட்டி சட்டப்பேரவையில் முதல்வர் அவரது குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அளித்துள்ளார். முதல்வரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள் யாகேஷுக்கு வீரதீரச் செயலுக்கான விருதை முதல்வர் அளிக்கவேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதேபோன்று யாகேஷ் மரணத்துக்குக் காரணமாக இருந்த ஆட்டோ ஓட்டுநர் கேசவன் மீது கொலை முயற்சி வழக்கு மட்டும் போட்டுள்ளதை கொலை வழக்காக மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையையும் வைத்துள்ளனர்.