

மதுரையில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பாஜக நடத்திய பொதுக்கூட்டத்தில், ‘ஒய் டிஎம்கே ஒய்’ (Why DMK Why?) என திமுகவுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி.
குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பாஜக சார்பில் மதுரை செல்லூரில் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. பாஜக மாநில துணைத் தலைவர் சுப.நாகராஜன் தலைமை வகித்தார். மதுரை மாநகர் மாவட்ட தலைவர் சசிராமன் வரவேற்றார்.
இதில் மத்திய ஜவுளி மற்றும் பெண்கள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியதாவது:
திமுகவிடம் பல்வேறு கேள்விகளை கேட்க விரும்புகிறேன். நாட்டின் எல்லையை பாதுகாப்பவர்கள் மீது களங்கம் ஏற்படுத்துபவர்கள், ராணுவ வீரர்களை தாக்குபவர்களுக்கு ஆதரவாக திமுக பேசுவது ஏன்?
கடந்த 2007-ல் மத்திய அரசில் திமுக இருந்தது. அப்போது இலங்கை தமிழர்களை தமிழகத்தில் குடியமர்த்தக்கூடாது என காங்கிரஸ் அரசு அரசாணை வெளியிட்டது. அப்போது அதை திமுக எதிர்க்காதது ஏன்? இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்தது ஏன்?
இலங்கை தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் கூட இந்தியாவில் குடியுரிமை வழங்குவதை தடை செய்யும் சட்டத்தை காங்கிரஸ் கொண்டு வந்தபோது திமுக ஆதரித்தது ஏன்?
வாஜ்பாய் பிரதமராக இருந்த போது பாகிஸ்தான் போரில் பாதிக்கப்பட்ட இந்துக்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கவும், அவர்களை ராஜஸ்தான், குஜராத்தில் குடியேற்றவும் சட்டம் கொண்டு வந்த போது திமுக ஆதரித்தது. அப்போது இந்துக்களை ஆதரித்த திமுக, இப்போது எதிர்ப்பது ஏன்?
பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வரும் இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் மீது திமுகவுக்கு அன்பு இல்லையா என கேட்கவிரும்புகிறேன்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, இந்திய நலனுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் பல்வேறு அறிக்கைகளை அளித்து வருகிறார். ராகுலை பின்பற்றி திமுக ஏன் பாகிஸ்தானை ஆதரிக்க வேண்டும்.
இந்தியாவை துண்டாடும் வகையில் காங்கிரஸ் கட்சி பல்கலைக்கழகங்களுக்கு சென்ற மாணவர்களை நாட்டிற்கு எதிராக தூண்டிவிடுகிறது. காங்கிரஸின் இந்த சதிக்கு திமுக ஏன் உடந்தையாக இருக்கிறது?
ராஜஸ்தான் மாநில தேர்தலில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வெற்றிப்பெற்றால் குடியுரிமை சட்டம் கொண்டுவரப்படும் என்று கூறியது. அதை தான் பாஜக செய்துள்ளது. ஆனால் காங்கிரஸ் எதிர்க்கிறது. காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை திமுக கண்டிக்காதது ஏன்? இப்போது எதிர்ப்பது ஏன்? இதற்கு திமுக பதிலளிக்க வேண்டும்.
இவ்வாறு ஸ்மிருதி இரானி பேசினார்.
முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், மாநில செயலர் ஸ்ரீனிவாசன், மாநில மகளிரணி தலைவர் ஏ.ஆர்.மகாலெட்சுமி, மகா சுசீந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.