

முறைசாரா தொழிலாளர்களுக்கான குறைதீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று முறைசாரா தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். முறைசாரா தொழிலாளர்களின் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் தேக்கமடைந் துள்ளதால் தீர்ப்பாயம் அமைத்து குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பாக சேப்பாக்கத்தில் நேற்று தர்ணா போராட்டம் நடை பெற்றது. இதில் கலந்து கொண்ட தேசிய அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பின் செயலாளர் கீதா கூறியதாவது:
தமிழ்நாட்டில் சுமார் 2.5 கோடி முறை சாரா தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் பலருக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பணப்பயன்கள் கிடைப்பதில்லை. ஓய்வூதியத் தொகை ரூ.1000, பேறு கால உதவித் தொகை ரூ.6 ஆயிரம், கல்வி உதவித் தொகை ரூ.2 ஆயிரம் உள்ளிட்ட பயன்களை பெறுவதற்கு பல ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் தேக்கம் அடைந் துள்ளன.
சேலத்திலும் திருச்சியிலும் தலா 3 ஆயிரம் விண்ணப்பங்கள் தேக்கமடைந்திருப்பதற்கு சான்றுகள் உள்ளன. தொழிலாளர் நல வாரியங்களை வருவாய் துறையுடன் இணைத்ததால் குழப்பமும் ஊழலும் அதிகரித்துள்ளது. நீதிமன்ற வழக்கு செலவுகள் பணப்பயன் தொகையை விட அதிகமாக இருப்பதால் தொழிலாளர்களால் வழக்கு தொடுக்க முடிவதில்லை. எனவே, குறைதீர்ப்பாயம் அமைத்து முறைசாரா தொழிலாளர்களின் குறைகளை தீர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த போராட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பின் மாநிலச் செயலாளர் ஆர்.லீலாவதி, பெண்ணுரிமை இயக்கத்தை சேர்ந்த கமலா மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் பலர் கலந்து கொண் டனர்.