விழுப்புரத்தில் கரும்பு எடுத்துச் செல்வதில் ரஜினி ரசிகர்களுக்கிடையே மோதல்

மோதலில் ஈடுபட்ட ரஜினி ரசிகர்கள்
மோதலில் ஈடுபட்ட ரஜினி ரசிகர்கள்
Updated on
1 min read

விழுப்புரத்தில் கரும்பு எடுத்துச் செல்வதில் ரஜினி ரசிகர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.

ரஜினிகாந்த் நடித்துள்ள 'தர்பார்' திரைப்படம் இன்று (ஜன.9) வெளியானது. இந்தத் திரைப்படத்தைக் காண ரஜினி ரசிகர்கள் முண்டியடித்துக்கொண்டு தியேட்டர்களுக்குச் சென்றனர்.

விழுப்புரத்தில் 4 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டது. இதில் ரங்கநாதன் தெருவில் தியேட்டரில் முதல் காட்சியைப் பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்களுக்கு ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டத் தலைவர் எத்திராஜ் தலைமையில் கரும்பு, விதைப்பந்து, இனிப்பு ஆகியவற்றை பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது.

இவற்றைப் பெறுவதற்காக ரசிகர்கள் முண்டியடித்துக்கொண்டு சென்றனர். கூட்டம் அலைமோதியதால் ஏதேனும் பிரச்சினை ஏற்படாமல் இருக்க அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். அந்த சமயத்தில் ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு கரும்பு, விதைகளை வாங்கினர்.

மோதலில் ஈடுபட்ட ரஜினி ரசிகர்கள்
மோதலில் ஈடுபட்ட ரஜினி ரசிகர்கள்

அப்போது ரசிகர் ஒருவர் தன்னுடன் வந்த நண்பர்கள் சிலருக்கும் சேர்த்துக் கொடுப்பதற்காக 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டை அப்படியே எடுக்க முயன்றார். இதை அங்கிருந்த ரசிகர்கள் சிலர் தட்டிக் கேட்டனர். இதனால் அவர்களுக்கிடையே கடும் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதைப் பார்த்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் குறுக்கிட்டு அவர்களைச் சமாதானம் செய்ய முயன்றனர். அவர்கள் எவ்வளவோ முயன்றும் அதைப் பொருட்படுத்தாமல் ரசிகர்கள் இரு தரப்பாக ஒருவரையொருவர் சாலை நடுவே திட்டித் தாக்கிக்கொண்டனர். இதில் ரசிகர் ஒருவர் சரமாரியாகத் தாக்கப்பட்டார்.

உடனே அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த விழுப்புரம் மேற்கு போலீஸார் விரைந்து சென்று மோதலில் ஈடுபட்ட ரசிகர்கள் அனைவரையும் விரட்டியடித்தனர். இந்த மோதலால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டு பின்பு தணிந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in