

மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த திருப்பதி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "ஜல்லிகட்டு நடைபெறும் இடத்தில் மாடுகளை பதிவு செய்யும் இடம், மருத்துவ பரிசோதனை செய்யும் இடம், வாடிவாசல், வாடிவாசலை கடந்து வரும் காளைகளை பிடிக்கும் இடம் ஆகியன முக்கியமானது.
ஜல்லிக்கட்டில் காளைகளை அவிழ்க்க உரிய அனுமதி பெற்று அதற்கான டோக்கனுடன் காளைகளுடன் உரிமையாளர்கள் வாடிவாசலுக்கு பின்னால் நீண்ட வரிசையில் காத்திருப்பர்.
ஜல்லிக்கட்டு நடைபெறும் முதல் நாளில் காளைகளுடன் உரிமையாளர்கள் வெளியூர்களில் இருந்து வந்து மருத்துவ பரிசோதனை சான்றிதழ் பெற்று காத்திருக்கும் போது பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன.
இதை முறைப்படுத்த அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு முறையாக டோக்கன் வழங்க தனிக்குழு அமைக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டது. ஆனால் பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் தனி வசதி செய்யப்படவில்லை.
எனவே மதுரை மாவட்டம் முழுவதும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு பரிசோதனை நடத்தும் இடம் மற்றும் வாடிவாசலுக்கு முன்பாக காளைகள், மாடுபிடிவீரர்கள், உரிமையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தனி குழு அமைத்து ஒழுங்குபடுத்த உத்தரவிட வேண்டும்"
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர் மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டினை பாதுகாப்பாக நடத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.