

அதிமுகவினர் கடத்தியதாக கூறப்பட்ட முதுகுளத்தூர் 8-வது வார்டு திமுக கவுன்சிலரை போலீஸார் உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததாகக் கூறி மனுதாரருக்கு நீதிபதிகள் ரூ.15,000 அபராதம் விதித்தனர்.
முன்னதாக நேற்று ராமநாதபுரம் முதுகுளத்தூரை சேர்ந்த ராஜா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "என் தந்தை சாத்தையா சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் 8 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். அவர் ஜன. 3-ல் நண்பர்களை சந்திக்க வீட்டிலிருந்து வெளியே சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
செல்போனில் என் தாயார் பேசிய போது அதிமுகவைச் சேர்ந்த தர்மர் உள்ளிட்டார் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக என் தந்தை தெரிவித்துள்ளார். இதையடுத்து என் தந்தையை மீட்கக்கோரி முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் மனு அளித்தோம். ஆனால் போலீஸார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் என் தந்தையை ஜன. 6-ல் அழைத்து வந்து பதவியேற்க வைத்தனர். பின்னர் கட்டாயப்படுத்தி என் தந்தையை அதிமுகவினர் கடத்தி சென்றனர். அதிமுகவினரின் கட்டுப்பாட்டில் உள்ள என் தந்தையை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் டி.ராஜா, பி.புகழேந்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் தந்தை சாத்தையாவை போலீஸார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். தவறினால் ராமநாதபுரம் எஸ்பி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சாத்தையாவை போலீஸார் ஆஜர்படுத்தினர். அவர் நீதிபதிகளிடம், என்னை யாரும் கடத்தவில்லை. என் மகள் வீட்டில் தங்கியிருந்தேன் என்றார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், குடும்ப பிரச்சினைக்காக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது. இதனால் மனுதாரருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இப்பணத்தை சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு மனுதாரர் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.