

புதுச்சேரி அரசுக்கு எதிராக ஆளும் கட்சியான காங்கிரஸ் எம்எல்ஏ மக்களை திரட்டி இன்று போராட்டம் நடத்தினார். முதல்வர் நாராயணசாமி பதவி விலக அவர் வலியுறுத்தினார்.
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே நீடிக்கும் அதிகார மோதலால், புதுச்சேரியில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
அதன் உச்சக்கட்டமாக அரசு வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப முடியாத சூழல் நிலவுகிறது.அத்துடன் கடும் நிதி பற்றாக்குறையால் அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் இருப்பு இல்லை. இலவச அரிசி வழங்கப்படவில்லை. முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட எந்தவொரு நலத்திட்டங்களையும் செயல்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது.
புதுச்சேரியை அடுத்த பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உயிர்காக்கும் மருந்துகள் எதுவும் இல்லை; அவசர உதவிக்கு ஆம்புலன்ஸை இயக்க டீசல் கூட போட இயலாத நிலை இருப்பதாக கூறி, பாகூர் தொகுதி மக்களின் உயிருடன் விளையாடுவதாக புதுச்சேரி அரசை கண்டித்து ஆளுங்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் தனவேலு இன்று (ஜன.9) பொதுமக்களுடன் பேரணியாக சென்று பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு புதுச்சேரி அரசுக்கு எதிராக கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.
போராட்டத்திற்கு பிறகு காங்கிரஸ் எம்எல்ஏ தனவேலு செய்தியாளர்களிடம் கூறுகையில், "புதுச்சேரியில் அரசு நிர்வாகம் கடந்த மூன்று ஆண்டுகளாக சீரழிந்து விட்டது. ஆளுநர் மீது குற்றம் சுமத்தி முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் தப்பிக்க பார்ப்பதால், மாநிலத்தின் வளர்ச்சி தடைபட்டுள்ளது. ஆட்சியில் லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடுகிறது. இதை முதல்வரால் தடுக்க முடியவில்லை.
ஆட்சி நடத்த முடியவில்லை என்றால் நாராயணசாமி தானாக முன் வந்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மற்றவர்களுக்கு வழிவிட வேண்டும். என்னை போன்று மற்ற சட்டப்பேரவை உறுப்பினர்களும் ஆளும் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த தயாராக உள்ளனர்" என்று தெரிவித்தார்.
ஆளும் காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவரே அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியதுடன், முதல்வர் பதவி விலக கூறியிருக்கும் சூழல் அரசியல் வட்டாரத்தில் விவாத பொருளாகியுள்ளது.